தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட்டால் மக்களுக்கு உதவிகள் வழங்குவது சுலபம்



'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக இருந்தால், வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கான உதவிகளை வழங்க அரசாங்கத்திற்கு மிக இலகுவாக இருக்கும்' என்று பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமன்றி வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் அவர் இதன் போது அழைப்பு விடுத்தார்.

"வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்க ஜனாதிபதியுடன், தமிழ் அரசியல்வாதிகள் கைகோர்த்தால் அந்த நடவடிக்கை மேலும் இலகுவாக முன்னெடுக்கப்படும்" என்று கமல் குணரத்ன நம்பிக்கை வெளியிட்டார்.

மக்களுக்கு இயலுமான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றி கொண்டதாகவும், அதன்படி, மக்களுக்கு தாம் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இந்த நிலையிலேயே வடக்கு பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். "சில தரப்பினர் கூறுகின்ற காரணங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொள்ளாது செயற்பட முடியாது" என அவர் தெரிவிக்கின்றார்.

இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் ஆபத்து ஏற்படாது எனக் கூறிய கமல் குணரத்ன, இராணுவ முகாம்களினால் மக்களுக்கு சேவைகளே கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். "யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலப் பகுதிகளிலும் வடக்கு பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்துவதற்காக இலங்கை இராணுவம் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியது. இன, மத வேறுபாடின்றி, இலங்கை மக்களுக்கு எங்களால் முடிந்தளவு உதவிகளை செய்ய நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்" என்று கமல் குணரத்ன தெரிவித்தார். "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருள்களை அழிவடைய செய்ய அரசாங்கம் என்ற வகையில் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை" என்றார் அவர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொல்பொருள்கள் அழிக்கப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.