கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய சேவைக்கு 2000 பேர் உள்ளீர்ப்பு


கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து 2000 பேர் ஆசிரிய சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளனர் என கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சினது செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா நேற்றுத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மண்முனை மேற்கு, வாகரை, மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் மிக நீண்டகாலமாக நிரப்பப்படாததால் அப்பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயம்.

இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகிறீர்கள் என இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் விளக்குகையில்,

மண்முனை மேற்கு, வாகரை ஆகிய கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன.இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதைத் தவிர வேறுவழியில்லை. ஆதலால், புதிதாக 2000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக உள்ளீர்க்கப்பட இருக்கின்றனர். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்.

ஆசிரிய உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், கல்வி வலயத்தில் நிலவும் பாட ரீதியான வெற்றிடங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்தரவுகள் காட்டும் எண்ணிக்கைக்கு ஏற்ப அவ்வப் பகுதியிலிருந்தே ஆசிரிய உதவியாளர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்படும் ஆசிரியர்கள், அவர்களது வசிப்பிட பகுதியில் நியமனம் பெறுவதால், எதிர்காலத்தில் இடமாற்றம் கோரமாட்டார்கள்.

அதனால் அப்பகுதிகளில் ஆசிரிய வெற்றிடம் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை. நிறைவான கல்வி, அப்பகுதி மாணவர்களுக்கு கிடைக்கக் கூடயதாய் இருக்கும்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், இன்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையின் அமைச்சில் இடம்பெற இருக்கிறது. இதில் தொழிலாண்மை, சிறு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சி.வி. புஞ்சிநிலமேயும் கலந்து கொள்கிறார்.