திருவாசம் முற்றும் ஓதல் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு ஆலயங்களிலும்




வி.சுகிர்தகுமார்

இந்து ஸ்வயம் சேவக சங்க அம்பாரை மாவட்ட கிளை முன்னின்று நடாத்தும் திருவாசம் முற்றும் ஓதல் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு ஆலயங்களிலும் நாளாந்தம் நடைபெற்று வருகின்றது.
சர்வ மங்களம் பொருந்திய மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை பொழுதில் மாணிக்கவாசக பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகப்பாடல்களால் இறைவனையும் சூடிக்கொடுத்த கோதைநாச்சியின் திருப்பாவை பாடல்களால் ஸ்ரீமத் நாராயணனையும் பாடிக் கசிந்துருகி மனதிற்குப் புத்துணர்வூட்டி எம்மை எல்லாம் ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தும் நிகழ்வாக திருவாசம் முற்றும் ஓதல் நிகழ்வுகள் கருதப்படுகின்றது.
தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழியில் கருவாசகம் தீர்க்கும் திருவாசகத்தை ஆலய பரிபாலன சபைகளின் ஏற்பாட்டு ஆதரவுடன் இந்து ஸ்வயம் சேவக சங்க அம்பாரை மாவட்ட கிளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக கடந்த 03ஆம் திகதி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் 04ஆம் திகதி ஸ்ரீ மருதயடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் 05ஆம் திகதி ஸ்ரீ மகாகணபதி ஆலயத்திலும் 06ஆம் திகதி ஸ்ரீ செல்லப்பிள்ளையார் ஆலயத்திலும் 07ஆம் திகதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும் 09ஆம் திகதி ஸ்ரீ தில்லையாற்று பிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்று வருவதுடன் 11ஆம் திகதி அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெறவுள்ளது.
திருவெம்பாவை வழிபாடுகள் ஆலயங்களில் நடைபெற்றுவரும் இச்சிறப்புமிகு காலத்தில் அருள்நிறை இறைபணியில் திருவாகம் முற்றும் ஓதும் ஓதுவார்கள் பலர் கலந்து திருவாசகத்தினை ஓதி சிறப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.