2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும் !

தற்போது இடம்பெறும் வாகன விபத்துக்களுக்கு அமைவாக இவ்வருடத்தினுள் சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கக்கூடும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (26) முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த வருடத்தினுள் வீதி விபத்துக்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாத்திரம் குறைந்தளவில் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க வேண்டியேற்படும் எனவும் குறித்த பிரிவுகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் சிறப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது இடம்பெறும் வீதி விபத்துக்களில் நாளொன்றுக்கு 6 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், வீதி விபத்துக்களில் காயமடையும் ஒரு நபருக்காக ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.