ரத்தமும் சதையுமாக... | ஒரு நூற்றாண்டுக்கு முன்னரான கிராமிய சரிதம்.


பா.மிதுர்ஷன் 
விஞ்ஞான  பீடம் 
கொழும்பு பல்கலைக்கழகம் 


ரத்தத்தில் எழுதப்பட்ட காவியம்

மனுசனுக்கு மனுசன் என்னடா தீட்டு...? உங்க புஞ்சையை அவன் மிதிக்குறான்... உங்க கலப்பையை பிடிச்சு அவன் உழுகுறான். அவன் காலால மிதிச்சு கசக்குற கதிரிலே தான் நீங்க வாயால தின்னுற நெல்லும் தவசமும் ஒட்டி இருக்கு....? அதிலே எல்லாம் தீட்டு இல்லே... தரையில் ஊறுற தண்ணிக்கு மட்டும் எங்கிருந்துடா வந்தது தீட்டு...
*( வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலிலிருந்து )

தீட்டும், தீண்டாமையும், சாதியும் எப்போதும் மனிசப்பயலுக மத்தியில் பகைமையத்தான் விதைச்சி வைக்குது. அரசியலில் சாதியும், ஆன்மீகத்துல சாதியும், பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கிறதுல சாதியும், ஊர் எல்லையில் சாதியும், படிக்குறதுல சாதியும், படி அளக்குறதுல கூட சாதியும், தனக்கு தேவையான நேரத்துல தலையை விரிச்சுப் போட்டு தொங்கு... தொங்கு... தங்கு... தங்குனு பேயாட்டம் ஆடிப்போகுது. தமிழர்கள் தமிழ் தெரியாத ஒரு தலைமுறையை அடைந்த விட்ட நிலையிலும், சாதி தெரியாத தலைமுறையாகவில்லை.

இப்பயெல்லாம் யாரு சாமி சாதி பாக்குறாக.... என்ற பொத்தாம் பொதுவான கேள்வி, சனங்களின் வாயில் விழுந்தாலும்.....

தம்பி எவடம், எந்த ஊரப்பு, எந்த ரோட்டு, எந்த ஒழுங்கை, அவாவின்ர சொந்தமோ, இவாவின்ர சிநேகமோ, என்ன சாமி அப்பன் கும்பிடுற நீங்கள்.....?
என்று வரிசையாக அடுக்கப்படும் கேள்விகள், நேரடியாக மூக்கைத் தொடாமல் தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவதாய், பிறந்த சாதியறிகிற கூட்டம் இன்னும் இங்கே குறைவில்லாமலே இருக்குது.

இங்கேயும் அப்படித்தான், களவை மட்டுமே தொழிலாகத் தெரிந்த கொம்பூதி, அடிமைச்சாதியாகவே கிடக்கும் பெரும்பச்சேரி, உயர் சாதி ரத்தம் ஓடுகிறது என்கிற நினைப்பில் பெருநாழி இந்த மூன்று ஊரும் வெள்ளைக்காரனும் தான் இந்த குற்றப்பரம்பரை.

ஒரு கிராமத்தின் அழகியலை உணர்ந்த ஒருவராலேயே இப்படியொரு காத்திரமான படைப்பை தரமுடியும்.

' தோல் உரித்த நுங்கு நிறத்தில் பொழுது விடிந்து கொண்டிருந்தது'

இந்த ஒற்றை வரியே இப்படைப்பின் ஒரு பருக்கை அமுது. அது வெந்திருப்பின் முழுப்படைப்புமே அரிசியின்றி, நெல்லின்றி, உமியின்றி, கல்லின்றி, மணலின்றி, சோறாக பானை முழுவதும் நிறைந்திருக்கின்றதென்பது நிஜம்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல், மாடுபிடி என்றெல்லாம் தெரிந்த தமிழர்களின் பாரம்பரியத்தை எருதுகட்டு எனும் பெயரில் ரகம் ரகமாய் காளைகளை அனுப்பி நம்மை சிலுப்பி விடுவதும் அழகியலே.

பூமணியின் வெக்கை நாவலை வெற்றிமாறன் படமாக்கியதன் பின்பே அப்படைப்பை வாசித்தேன். அதில் எப்படி செலம்பரத்தின் அய்யா தனுஷாகவே தெரிந்தாரோ அப்படியே இந்த நாவலும் ஒரு காத்திரமான சினிமாவாக கண்களுக்குள் ஓடி மறைந்தது.

வேயன்னாவாக ராஜ்கிரணும், கூழானிக்கிழவியாக சின்னக்கவுண்டர் மனோரமா ஆச்சியும், வில்லாயுதமும், சேதுவுமாக நடிகர் தனுஷும் நடிக்க இது ஒரு வெற்றிமாறனின் படமாகவே மனதிற்குள் கரையேறுகிறது. வஜ்ராயினி மனதிற்குள் காதலை பருக்கினாலும், ஹஸார் தினாரும், நாகமுனியும் ஒரு கிராமத்தின் வாழ்தலின் ஓட்டத்தை குறுக்கீடு செய்வதை தொடரொன்றின் சுவை என்று கடந்து செல்க.

களவின் பின் நிலம் தெறிக்கும் ரத்தமாக, குத்தீட்டியிலும், அருவாவிலும், வளரியிலும், கச்சேரி போலீசின் துப்பாக்கியிலும் வீழும் பிணங்களாக, உடன் பிறந்த தங்கையின் வயிற்றை கிழித்து எறியப்பட்ட சிசுவாக, மாட்டிற்கு சூடு வைப்பது போல் முடி கருக உதடுகள் பதபதக்க வைக்கப்படும் சூட்டுக்கோலாக..... ரத்தமும் சதையுமாய் ஒரு நிலம் சிவந்த கதையை பேனா மையில் காகிதம் நிரப்புவதென்பது சாதரண காரியமல்ல.

நாக்கை விட வாக்கு முக்கியம், வாக்கிற்காக உயிரையே விடும் வேயன்னா போன்ற மறவர்கள், திருட்டை ஒரு குற்றமாகவே கருதவில்லை. அது பட்டினி கிடக்கும் தன் மக்களிற்கான சோறும் நீரும் தரும் தொழிலே ... என்று வாழ்கின்ற மக்கள் மத்தியில் இதெல்லாம் தப்பு என்பதை வன்முறையோ வாய்த்தகராறோ உணர்த்தவில்லை. படிப்பும் பாசமும் தான் களவு என்பது குற்றம் அதனாலேயே நீங்கள் குற்றப்பரம்பரையாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை சொல்லிச்செல்கிறது.

அன்னமயில், சிட்டு, களாத்தி, ராக்கு என வரிசை கட்டி நிற்கும் பெண்பாத்திரங்கள் யாவும் கிராமமொன்றின் பெண்ணியத்தை மாறுபட்ட கோணங்களில் காட்ட வேல ராமமூர்த்தி கையாண்ட ஆயுதங்கள்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்பதும், பாமரனின் உடலுக்குள் பாசம் மட்டுமே உயிர் வளர்க்கும் என்பதையும் எழுத்தில் தந்திருக்கும் படைப்பாகும்.

இதுவும் ஒரு வித ஆய்வுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த கிராமத்து மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அவர்களோடு பின்னிப்பிணைந்து கிடக்கும் சாதியத்தை, ஆதிக்கத்தை, அடக்குமுறையை பதிவு செய்கின்ற படைப்பாகும்.

இரண்டு ராத்திரிகள் இந்த நாவலோடே கடந்து போனது. யதார்த்தமும், கிராமிய அழகியலும் கொட்டிக்கிடக்கிற புதையலாக இந்த நாவல் கரையேறுகிறது.

எல்லாவற்றையும் தனது பேனாவினால் எழுதித் தள்ளிவிட்டு கையில் அருவாளோடு குலசாமியாக நிற்கிறார் வேல ராமமூர்த்தி.

அன்புடன் இந்திரா.

குறிப்பு - இப்பதிவு வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவல் தொடர்பான எனது கண்ணோட்டமாகும்.


இப்படைப்பு தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...
தொடர்புகளுக்கு - mithanrajh@gmail.com
முகவரி - 11, மத்திய வீதி, பெரியநீலாவணை - 02 , கல்முனை.