2026ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை ஆரம்பித்தல் வழிகாட்டல் !


2026ஆம் ஆண்டிற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை ஆரம்பம் தொடர்பான விசேட வழிகாட்டல்களைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை நேர நீடிப்பு தொடர்பான தீர்மானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தரம் 5 மற்றும் தரம் 6-13 வரையான மாணவர்களுக்குப் பாடசாலை முடியும் நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நாட்டில் நிலவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, 2026ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகள் தற்போது நடைமுறையிலுள்ளவாறு முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே நடைபெறும்.

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைவாகத் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கான கற்றல் நடவடிக்கைகள் பின்வரும் திகதிகளில் ஆரம்பமாகும்:தரம் 1: பிள்ளைகளை இனம் காணும் நடைமுறைகள் ஜனவரி 05 இல் ஆரம்பிக்கப்பட்டு, உத்தியோகபூர்வ கற்றல் நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 முதல் ஆரம்பமாகும்.
தரம் 6: 2026 ஜனவரி 21 ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் (நிர்வாக நடவடிக்கைகள் ஜனவரி 05 முதல் தொடங்கும்).
ஏனைய தரங்கள்: 2026.01.05 ஆம் திகதி முதலாம் தவணை ஆரம்பமாகும்.

முஸ்லிம் பாடசாலைகளின் நேர ஒழுங்குகளில் பின்வரும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:திங்கட்கிழமை: முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை (7 பாடவேளைகள்).
செவ்வாய் முதல் வியாழன் வரை: முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 2.15 வரை (8 பாடவேளைகள்),.
வெள்ளிக்கிழமை: மத வழிபாடுகளுக்காகப் பாடசாலை நடவடிக்கைகள் முற்பகல் 11.15 மணிக்கு நிறைவு செய்யப்படும் (4 பாடவேளைகள் மட்டும்).

ஆசிரியர்களுக்கான பணி வழிகாட்டல்கள்:புதிய சீர்திருத்தங்களின் கீழ், ஒரு ஆசிரியர் வாரத்திற்கு 35 பாடவேளைகளில் கடமையாற்ற வேண்டும். இதில் குறைந்தது 28 பாடவேளைகள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஒதுக்கப்பட வேண்டும்.
மேற்பார்வை ஆசிரியர்கள் வாரத்திற்கு 14 பாடவேளைகளும், பிரதி அதிபர்கள் 8 பாடவேளைகளும், உதவி அதிபர்கள் 10 பாடவேளைகளும் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,.

புதிய பாடத்திட்ட மாற்றங்கள்:
2026 முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்குப் புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

தரம் 6 மாணவர்களுக்கு மேலதிக கற்றல் மொடியூல்களாக (Modules) தாய்மொழி (தமிழ்/ சிங்களம்) இலக்கியம் மற்றும் ஆங்கில இலக்கியம் (Appreciation of English Literature – Into the Wild) ஆகிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இந்த அனைத்து மாற்றங்களும் 2026ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.