குடும்பநல உத்தியோகத்தர் ஒருவரின் தாலிக்கொடி வழிப்பறி கொள்ளையர்களினால் பறிமுதல் !

(வி.சுகிர்தகுமார்) 
அக்கரைப்பற்று 7 இன் கீழ் 4ஆம் பிரிவில் வைத்து நேற்று(24) மாலை குடும்பநல உத்தியோகத்தர் ஒருவரின் தாலிக்கொடியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர். குறித்த உத்தியோகத்தர் தனது கடமையின் நிமித்த பிரிவிற்குள் சென்று வீடு திரும்புகையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று மாலை குறித்த பெண் உத்தியோகத்தர் தனது கடமையின் பொருட்டு தனக்கு பொறுப்பான பிரிவிற்குள் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அவதானித்து பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்னை பின்தொடர்ந்து சென்று முன்னால் மோட்டார் சைக்கிளை செலுத்தி இடைமறித்து தாலிக்கொடியினை அபகரிக்க முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் தாலிக்கொடியினை காப்பற்றி போராடியபோதும் முடியாத நிலையில் பறிகொடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்த உத்தியோகத்தர் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாட்டினை நேற்றிரவு பதிவு செய்துள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க கடந்த மாதத்தின் முற்பகுதியிலும் இப்பெண்ணின் தாலியினை பறிக்க ஒருவர் முயற்சித்த நிலையில் சம்மந்தப்பட்டவர் அடையாளம் காணப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அன்மைக்காலமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் செயற்படுவதன் அவசியத்தையும் பொலிசார் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இதன் மூலம் சுட்டிக்காட்ட முடிகின்றது.