மட்டக்களப்பில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பாரிய சிரமதானப் பணி !

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜாவின் பணிப்புரைக்கு அமைவாக இன்று காலை மாவட்டச் செயலக வளவில் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதான பணி இன்று (14) இடம்பெற்றது.
இந்த பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி மட்டக்களப்பு மாவட்டத்தில் வாரத்தில் ஒரு நாள் நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டு இதன் ஆரம்பப் பணியாக இன்று மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவையாளர்கள் இணைந்து டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான இடங்களை சுத்தப்படுத்தி துப்புரவு செய்யும் பணியில் அரச அதிபர் கலாமதி பத்மராஜாவின் வழிகட்டுதலுடன் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் அறிக்கையினூடாக அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு வைத்திய சுகாதார பிரிவிலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் 193 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார பிரிவில் 29 பேரும் 1085 பேர் இவ் வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதனைத் தடுக்கும் முகமாகவே அரசாங்க அதிபரின் பணிப்பில் இவ்வாறான முன்னாயத்த டெங்கு நோய்த் தடுப்பு சிரமதான செயற்பாடு மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இச் சிரமதான பணி மேற்கொள்ளப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.