திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 4 சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு !

(பாறுக் ஷிஹான்)
பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பதியப்பட்ட 20 கட்சிகளும் 38 சுயேட்சை குழுக்கள் உட்பட 58 விண்ணப்பங்கள் முறைப்படி கிடைக்கப்பெற்றிருந்தன. இதில் 4 சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பு மனுக்கள் நிறைவடைந்த பின்னர் வியாழக்கிழமை (19) மாலை அம்பாரை மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இதில் அம்பாரை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாரை தேர்தல் தொகுதியில் 1 லட்சத்து 77ஆயிரத்து 144 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில்90 ஆயிரத்து 405 பேரும் , கல்முனை தேர்தல் தொகுதியில்77ஆயிரத்து 637பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 793 பேரும் 2019 ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தொகுதி வாரியாக அம்பாரை தேர்தல் தொகுதியில் 181 வாக்கெடுப்;பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

பிரதேச செயலக ரீதியாக அம்பாரை தேர்தல் தொகுதியில், தெஹியத்தகண்டி – 48349, பதியத்தலாவ- 14944, மகோயா- 16760, ஊஹன – 46973, அம்பாரை – 33758, தமண- 16360, சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் நாவிதன்வெளி- 15781, சம்மாந்துறை – 46493, இறக்காமம் - 10961, கல்முனைத் தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது – 20097, கல்முனை தமிழ்- 23024, கல்முனை முஸ்லிம் - 34516, பொத்துவில் தேர்தல் தொகுதியில் லகுகல- 7264, பொத்துவில் - 26858, திருக்கோவில் -20860, ஆலையடிவேம்பு - 18095, அட்டாளைச்சேனை - 31616 , நிந்தவூர் - 21906, காரைதீவு – 13478 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

அம்பாரை மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 10 பேர் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவிலிருந்து போட்டியிடுவர்.வேட்பு மனுத்தாக்கல் யாவும் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி வியாழக்கிழமை இன்றுடன் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது என குறிப்பிட்டார்.எனினும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.