கொரோனா தொற்றும் மட்டக்களப்பின் தற்போதைய நிலையும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் மக்கள் நடமாட்டத்தினை வெகுவாக குறைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கெட்டியாராச்சி தெரிவித்தார். அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களும் சுகாதார சேவையினரும் மற்றும் மக்களுக்கு உணவுப்பொருட்களை வினியோகிப்பவர்களும், மருந்தகங்கள் வங்கிகள் என்பனவும் இயங்கி வருகின்றதாக குறிப்பிட்டார்.

அரச தனியார் போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வேலைக்கு வருகின்ற ஊழியர்கள் மட்டும் வருகை தருவதற்காக அரச பேருந்து சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நேரங்களில் அனுமதியுடன் வினியோகிப்போரால் வழங்கப்பட்டு வருவதும் போதனா வைத்தியசாலையில் கிளினிக் தொடர்ந்து வந்த உரிய நோயாளிகள் தங்களின் கிளினிக் இலக்கத்தினை அறிவித்து தங்களின் மருந்துகளை அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரின் அற்பணிப்பான சேவையினை பாராட்ட வேண்டும். இரவு பகல் பாராது தொடர்ச்சியக தாங்கள் கடமைகளுக்காக வீதிக்கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் கிறிக்கட் விளையாடி வருகின்றதாகவும், வீதி ஓரங்களில் கதிரைகளை போட்டுக்கொன்டு அயல் வீட்டாருடன் அளவலாவுவதும் விருந்து போடுவதும் என தேவை இல்லாது வெளியில் உலாவுவது தடை செய்யப்பட வேண்டும் என ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

உண்மையில் தற்போது உலக நாட்டை ஆட்டிப்படைக்கின்ற கொரோனாவை முற்றாக நமது நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு சகல மக்களும் ஒத்துழைப்பு வழங்கி பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் ஆதரவு வழங்குவது மிக மிக அவசியமானது. கொரோனாவின் கோரத்தினை குறைப்போம் கூடி வாழ்வோம்.