ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்; மீறுவோர் தனிமைப்படுத்தப்படுவர் - வைத்தியர் எஸ்.அகிலன்


(வி.சுகிர்தகுமார்)
ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இதனை ஆலய நிருவாகமும் பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சமய வழிபாடு மற்றும் ஆலயங்களில் இடம்பெறவுள்ள உற்வசம் விசேட வழிபாடுகள் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இச்சந்தர்ப்பத்தில் சமய வழிபாட்டுத்தலங்களை திறந்து மக்கள் வழிபாட்டிற்கு வழங்க வேண்டாம் என சுகாதார அமைச்சு மிகத்தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனாலும் ஆலயத்தில் நடைபெறும் நாளாந்த விசேட பூஜைகளை மக்கள் பங்களிப்பின்றி நடத்தலாம். இந்நிலையில் ஆலயத்தில் ஆலய குரு மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 5பேர் மாத்திரமே இருக்க முடியும் எனவும் அவர்களும் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதனை மீறி செயற்பட்டாலோ அல்லது ஆலய வளாகத்தினுள் அதிகமான மக்கள் இருந்தாலோ அதற்கு முழுப்பொறுப்பும் ஆலய தலைவர் உள்ளிட்ட நிருவாகத்தையும், குருக்களையும் சாரும் என்பதுடன் அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என்றும் மனவேதனையுடன் தெரிவிப்பதாக கூறினார். இதைத்தவிர ஆலய வழிபாடு இல்லாத சந்தர்ப்பத்தில் ஆலயங்களில் கூடி நிற்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்றார்.

இதேநேரம் ஆலையடிவேம்பில் இதுவரையில் 200இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா அடையாளம் காணப்படாத நிலையில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் இன்றைய நிலையில் 142 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இந்நிலையில் அரசாங்கம் நாட்டை திறந்துள்ளது என மக்கள் தற்போது நினைக்கலாம். அதற்கும் காரணம் உண்டு. தொடர்ந்து நாட்டை மூடி வைப்பதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். வறுமை அதிகரிக்கலாம். கொரோனாவைவிட வறுமையில் இறக்கும் மக்களின் தொகை அதிகரிக்கலாம். இதனை கருத்திற் கொண்டே அரசாங்கம் தனிநபர் வருமானம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக நாட்டை திறந்துள்ளது. அதற்காக நாட்டில் கொரோனா நீங்கியதாக நினைத்து யாரும் பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிக்கக் கூடாது என்றார்.