திருக்கோவில் பிரதேசத்தினுள் உட்புகுந்த கடல் நீர் ! அச்சத்தில் மக்கள் !

(எஸ்.கார்த்திகேசு)
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் சுமார் 150 மீற்றர் தூரம் வரை ஊரை நோக்கி வந்துள்ளதுடன் ஆழ்கடல் மீனவர்களின் வலைகள், தோணிகள் சேதமடைந்துள்ளது. அருகாமையில் இருந்த குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ள அதேவேளை வீட்டு தோட்டமும் நாசமாகியுள்ளன.

திருக்கோவில் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிமை இரவு (17) திடீரென ஏற்பட்ட கடலலை சீற்றம் காரணமாக பாரிய சத்ததுடன் அலைகள் மேலெழுந்து கடல் நீர் வந்ததனால் அப்பகுதியில் இருந்த குடும்பங்கள் சுனாமி பீதியில் இரவு முழுவதுமாக வீதிகளில் கடற்கரையைப் பார்த்த நிலையில் விழித்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

இவ் கடலலை சீற்றம் காரணமாக ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கற்வேலிகளையும் தாண்டி பாரிய அலைகள் எழுந்து கடல் நீர் ஊருக்குள்  வந்த நிலையில் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தோணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ள அதேவேளை வலைகள் கடலலைகளால் இழுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கரையோர வீதி மற்றும் முருகன் ஆலய சூழல் என்பன கடல் நீர் நிரம்பியுள்ளதுடன் கடற்கைரையில் அமைக்கப்பட்டு இருந்த பொழுது போக்கு இடமும் நீர் நிரம்பி இருக்கைகளும் சேதடைந்து காணப்பட்டன.

இவ் அனர்த்தம் காரணமாக மீனவர்களுக்கு இலட்சக் கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அரசாங்கத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதேவேளை அருகாமையில் இருந்த குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் கடல் நீர் உட்புகுந்துள்ளதுடன் ஒருவரின் வீட்டுத் தோட்டமும் நாசமாகியுள்ள நிலையில் இவ் அனர்த்த நிலைமைகளை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோர் வருகை தந்து பார்வையிட்டு சேதவிபரங்களை அறிந்து கொண்டு இருந்ததுடன் ஊடகங்களுக்கு தவிசாளர் கருத்துக்களை தெரிவித்தும் இருந்தார்.