சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் தரம்5 புலமைப் பரிசில் மாதிரி பயிற்சி வினாவிடைக் கையேடு வழங்கி வைப்பு

(ஷமி)
கொவிட் 19 தாக்கத்தினால் பாடசாலைகள் மூடப்பட்டு பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். தற்போது பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பாடப்பரப்புகள் அனைத்தையும் கற்பித்துமுடிப்பது சவாலானதாக காணப்படுகின்றது.


இந்நிலையில் கட்டாரில் தொழில்புரியும் களுதாவளையை சேர்ந்த நண்பர்கள் அமைப்பான சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம் (SEEDA) தனது பணிகளில் ஒன்றாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஒரு வழிகாட்டி நூலினை அச்சிட்டு மாணவர்களுக்காக இலவசமாக வழங்கியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் மாணவர்களிடம் எதிர்பார்க்கின்ற 14 திறன்களை அடிப்படையாகக்கொண்டே இந்நூல் அமைந்திருந்தது. பரீட்சையில் வினவப்படும் திறன்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பயிற்சி வினாக்களை உள்ளடக்கியதாக இந்த நூல் காணப்படுகின்றது.

இந்தப் புத்தகங்கள் களுதாவளை கிராமத்தில் அமைந்துள்ள ஐந்தாம் தரம் வரை வகுப்புகள் இருக்கும் ஆறு பாடசாலையைச் சேர்ந்த தரம் ஐந்து மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்த செயற்பாட்டினை முன்னெடுத்த சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம் (SEEDA) பல்வேறு பணிகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு தேவையான காலத்தில் செய்யப்பட்ட இந்தச்சேவையை பலரும் பாராட்டினர்.