விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாய்!


சவுதி அரேபியாவில் இருந்து, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளான கர்ப்பவதியான தாயார் நேற்று (வெள்ளிக்கிழமை) குழந்தையை பிரசவித்துள்ளார்.

அந்தக் குழந்தை சுகதேகியாக இருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். இம்மாதம் சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இந்த பெண் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக, சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் விடத்தல்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், நேற்று முன்தினம் குழந்தைப் பேற்றுக்கான வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத்தினரால், யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் மகப்பேறு இடம்பெற்றுள்ளது.

மகப்பேற்றின் பின்னர், குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகவும், வைத்தியர்கள் தெரிவித்ததுடன், சிகிச்சை விடுதியில் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக எவரும் அற்ற நிலையில், தனியாக, கண்ணாடி பொருத்தப்பட்ட தனியான விடுதியில் இந்த தாயுக்கும் சேய்க்குமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின் பின்னர், இன்று யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து, திருகோணமலைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, வைத்தியசாலை மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரியவின் பணிப்புரைக்கு அமைவாக, விடத்தல்பளை படைத்தலைமையகத்தின் ஊடாக, மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.