மட்டக்களப்பில் சிரேஸ்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம் அவர்களின் மணிவிழாவில் கல்வியிலாளர்கள் கௌரவிப்பு


(சித்தா)
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்விப் பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளரும், உலகில் உள்ள சேவைத்துறைகளிலே மிகவும் உன்னதமானதும் உத்தமமானதுமான ஆசிரியப் பணியைத் தெரிந்தெடுத்து அதனைச் சிறப்பாக ஆற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களுடைய வாழ்க்கைகளை அழகாக வனைந்து அவர்களை இந்தச் சமூகத்திலே நல்ல குடிமக்களாக்கி பெரிதான தாக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித் துறையில் தன் மாணாக்கரினதும் அவர்சார்ந்த சமூகத்தினதும் நன்மதிப்பினையும் பெற்றுக் கொண்ட கல்வியலாளர் திரு.கணபதிப்பிள்ளை – ஞானரெத்தினம் அவர்களுக்கான மகிடம் சூட்டல் நிகழ்வு விழாக்குழுத் தலைவர் திரு.எம்.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு அஞ்ஞனா வைபவ மாளிகை அருட்சகோதரர்.கலாநிதி.S.A.I.மத்தியூ அரங்கில் 19.09.2020 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு நடைபெற்றது.

திரு.கணபதிப்பிள்ளை – ஞானரெத்தினம் அவர்கள் தனது 60 அகவையில் காலெடி எடுத்து வைத்துள்ளார். இத்தருணத்தில் இப் புலமையாளரின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் 'ஆசானுக்கு மகுடம் ' சூட்டல் நிகழ்வினையும், இதனை நினைவு கூறுமுகமாக திரு.கணபதிப்பிள்ளை – ஞானரெத்தினம் அவர்களின் பண்புயர்வான பணிகளையும் மாண்பினையும் வெளிக்கொணரும் வகையில் 'ஞானம்' என்ற பெயரில் வெளியீட்டு மலர் ஒன்றும் அவரிடம் கல்வி கற்றுப் பயன்பெற்ற மாணவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

அத்துடன் திரு.கணபதிப்பிள்ளை – ஞானரெத்தினம் அவர்களிடம் கல்வி கற்று தற்போது பொறியிலாளர்களாக உள்ளவர்களால் 'ஞானம் பவுண்டேசன்' எனும் புலமைப் பரிசில் நிதியமும் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந் நிதியத்தின் மூலம் மட்டக்களப்பு, அம்பாரை ஆகிய மாவட்டங்களில் கணிதத் துறையினை மேம்படுத்தவும் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் S.A. அரியதுரை அவர்கள் உபவேந்தர், திறந்த பல்கலைக்கழகம், இலங்கை. கௌரவ விருந்தினர்களாக திரு.M.K.M.மன்சூர், சிரேஸ்ட உதவிச் செயலாளர், மாகாணக் கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம். Dr.C.அருள்மொழி, தலைவர், கல்வி,பிள்ளை நலத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக் கழகம். திரு.M.I.M.நவாஸ், பீடாதிபதி, கல்வியல் கல்லூரி, மட்டக்களப்பு. திரு.K.புண்ணியமூர்த்தி,பீடாதிபதி, கல்வியல் கல்லூரி, அட்டாளைச்சேனை. Dr.S.M.ஜுனைதீன், பீடாதிபதி, பொறியியல் பீடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம். Prof.P.பிரதீபன், பீடாதிபதி, விஞ்ஞான பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம். Prof.S.திருக்கணேஸ், கணிதப் பேராசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகம். ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழாவின் சிறப்பான அம்சமாக திரு.கணபதிப்பிள்ளை – ஞானரெத்தினம் அவர்கள் தான் பெற்ற கல்வித் துறைசார் அடைவுகளில் பெரும் பங்கு வகித்த பேராசியர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்த வகையில் இந் நிகழ்வில் விசேடமாக பேராசிரியர் S.A. அரியதுரை, பேராசிரியர்.S.சந்திரசேகரன், பேராசிரியர் .P.C.பக்கீர் ஜபார், பேராசிரியர்.T.தனராஜ், பேராசிரியர்.M.செல்வராசா ஆகியோர் மகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.