தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சு நடவடிக்கை


178 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, ஆசிரியர் சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதி வழங்கியுள்ளார்.

நேற்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு, இன்னும் ஓரிரு தினங்களில் தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக உறுதியளித்ததாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகள் 1000 அபிவிருத்தி செய்வதை விட குறைந்த மாணவர்களைக் கொண்ட 300 பாடசாலைகள் தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு தான் கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும், இராஜாங்க அமைச்சுக்களின் பதவிகளில் இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆளணியினருக்கு நேர்ந்துள்ள கதி தொடர்பாக செயலாளருக்கு விளக்கியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.