ஏறாவூரில் 70 பேருக்கு PCR பரிசோதனை; 65 பேர் தனிமைப்படுத்தலில்!


(எம்.ஜி.ஏ நாஸர்)
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பிரதேசத்தில் எழுபது பேருக்கு கொரோனா பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அறுபத்தைந்துபேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி திருமதி சாபிரா வசிம் தலைமையில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் பீசீஆர் பரிசோதனை நடைபெற்றுவருவதாக எமது Battinews.com இணையதள சேவைக்கு பிராந்திய செய்தியாளர் எம்.ஜி.ஏ நாஸர் அறிவித்துள்ளார்.

நாட்டின் தென்பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காகச்சென்று திரும்பியவர்களை சுயதனிமைப்படுத்தல் செய்துள்ளதாகவும் சந்கேத்திற்குரியவர்களை பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்துவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதைனை முடிவின்பிரகாரம் ஏறாவூர்ப் பிரதேசத்தில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரியவந்துள்ளது.

இதேவேளை வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்குச் சென்றுவந்துள்ள பதினாறுபேர் சுயதனிமைப் படுத்தலுக்குட்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற கொரோனா தொற்றுள்ள மாவட்டங்களுக்கு சென்றுதிரும்பியவர்கள் சுயமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.