மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்

(எப்.முபாரக்)
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் இன்று(21) உத்தரவிட்டார்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 27 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூதூர் பெரிய பாலம் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதியொன்றில் வைத்து மூதூர் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்தாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஏழும், ஆயிரம் கள்ள நோட்டுகள் ஐந்தும், ஐந்நூறு கள்ள நோட்டுகள் இரண்டும் வைத்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை(20) இரவு கைது செய்துள்ளதாக மூதூர் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய கனணி, தொலைநகர், பிரிண்டர் மற்றும் அச்சு பதிப்பு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.