சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மீனவர்களுக்கு பெரும் தொழில் பாதிப்பு- நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை

(சிஹாரா லத்தீப்)
தற்பொழுது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாததால் ஜீவனோபாயத்துக்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலையால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் விடுகின்ற அறிவித்தலை நடைமுறையில் கொண்டால் தாம் பெரும் உணவு பஞ்சத்தை எதிர்நோக்கும் சூழலை எதிர்நோக்குவதாகவும் எனவே தமக்கு அரசாங்கம் நிவாரண உதவி வழங்கி தமது வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் உதவ முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் .

இது பற்றி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச மீனவர்கள் கருத்து வெளியிடுகையில் தமது மீன்பிடித் தொழிலை தவிர வேறு தொழில்கள் செய்ய முடியாதுள்ள தமக்கு ஜீவனோபாயத்துக்கு வழி இன்மையால் பெரும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் உயிரை பணையம் வைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும்பெருத்த கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் படகுகளிலும் தோணிகளிலும் தம் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை கவனித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சிகள் எடுத்து அரசாங்கத்தின் ஊடாக நிவாரண உதவிகள் பெற்று தரவேண்டும் என்றும் இப்பிரதேச மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதேவேளை களுவாஞ்சிகுடி பிரதேச தொழிலாளர்களுக்கு மீன்பிடி திணைக்களத்தினால் எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என்றும் குறைபாடு தெரிவிக்கும் இப்பிரதேச மீனவர்கள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அடையாளம் கண்டு இலகுவாக கரை திரும்புவதற்காக அங்கு போடப்பட்டிருந்த கலங்கரை விளக்கு செயலிழந்து சுமார் ஒரு வருடத்தை தாண்டியும் திருத்தம் செய்யப்பட வில்லை என்றும் குறைபாடு தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த கலங்கரை விளக்கினை விரைவாக திருத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுகின்றனர்.