மட்டக்களப்பு மாவட்ட பெரும்போக நெற் செய்கை அறுவடையினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய தீர்மானம்!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  
மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப் படுத்தல் சபையினால் எதிர்வரும் ஜனவரி 18 ஆந்திகதி முதல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் பெரும்போக நெல் அறுவடைகளை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்வது தொடர்பாக கூட்டம்; இன்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது 35 ஆயிரத்தி 500 மெற்றிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொண்டுள்ளதாக சபையின் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜீ. நிமால் எக்கநாயக தெரிவித்தார். 

இம் முறை பொருத்தமான முறையில் உலர்த்தப்பட்ட 1 கிலோ சம்பா/கீரி சம்பா ரூபாய் 52 ற்கும் 1 கிலோ நாட்டரிசி ரூபாய் 50 ற்கும் விவசாய அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக கொள்வனவு செய்யப்படவுள்ளது.


இம்முறை இம்மாவட்டத்தில் 1 இலட்சத்தி 74 ஆயிரத்தி 919.75 ஏக்கர் வயல் நிலத்தில் 48 ஆயிரத்தி 394 விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் 2 இலட்சத்தி 44 ஆயிரத்தி 886 மெற்றிக்தொன் நெல் அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 35 ஆயிரத்தி 500 மெற்றிக் தொன் நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வருடம் 2020 - 21 பெரும்போக நெற்செய்கையின்போது எவரேனும் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) அல்லது அதற்கு அதிகமான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும்போது நெல் உரநிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிவாரண உரங்களை 300 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவுகளில் பெற்றுக் கொள்கின்ற விவசாயிகள் தாம் அறுவடை செய்யும் நெல்லில் ஆகக்குறைந்தது 1000 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவை அல்லது விவசாயிகளின் விருப்பப்படி அதற்கதிகமான அளவு நெல்லை அரச நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு கட்டாயமாக வழங்க வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் காணிபிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சனி முகுந்தன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதி பணிப்பாளர் வீ. பேரின்பராசா மற்றும் பெரும்போக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.