மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் யானைகள் தாக்கி இருவர் மரணம்

( எம்.ஜி.ஏ.நாஸர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
கிரான்- ஈரளக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 34 வயதுடைய இளம் விவசாயியொருவர் இன்று உயிரிழந்துள்ளார். 
    
சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தயாபரன் என்பவரே மரணித்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.
ஈரளக்குளம் பிரதேசத்திலுள்ள தனது வயல் வாடியிலிருந்து அதிகாலை நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் வீடுசெல்லும்போது வீதியோரம் நின்ற யானை இவரை வழிமறித்துத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து டாக்டர் கே. சுகுமார் உடல்கூறு பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தார்.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் மரண விசாரணை நடாத்தினார்;
'ஈரல் சிதைவுற்று உள்ளக இரத்தக்கசிவினால் ஏற்பட்ட மரணம்" என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


முன்னதாக, வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மியான்கல் வயலில் அமைக்கப்பட்டிருந்த பரணில் காவலில் ஈடுபட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான திருவெம்பலம் சோமலிங்கம் (வயது 64) என்பவர், நேற்று (26) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.

உடற்கூராய்வுப் பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.