3 மாதங்களில் வாகன விபத்துக்களால் 14 பொலிஸ் அதிகாரிகள் பலி! 74 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்!


இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 14 பொலிஸ்  அதிகாரிகள் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 22 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 74 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 39 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 394 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

அவ்வாறே 2019 ஆம் ஆண்டில் வீதிவிபத்துக்களால் 38 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 292 பேர் காயமடைந்துள்ளனர்.

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வீதிவிபத்துக்களால், கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

அவ்வருடத்தில் 44 பொலிஸ் அதிகாரிகள் வீதி விபத்துக்களால் உயிரிழந்த அதேவேளை, மேலும் 321 பேர் காயமடைந்தனர்.

இதனைவிட வீதி விபத்துக்களால் சராசரியாக நாளொன்றில் 8 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.