MJF அறக்கட்டளை அமைப்பினால் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு!



MJF அறக்கட்டளை அமைப்பினால்(MJF Charitable Foundation) பல்வேறு வகையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது அதன் ஓர் பகுதியாக பெண்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் 17.03.2021 புதன் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வானது நிலைய முகாமையாளர் மார்க் பற்ரசன் தலைமையில் சற்று வித்தியாசமான வகையில் நடாத்தப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திரு தனபாலசுந்தரம் அவர்களும் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் அவர்களும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கிண்ணையடி , கும்புறுமுலை,கிரான் பகுதியை சேர்ந்த பெண்கள் குழு அங்கத்தவர்களும் இளைஞர் யுவதிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

ஓர் குடும்பத்தின் மகிழ்ச்சியானது அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரிலுமே தங்கியுள்ளது அன்பாகவும் புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்போடும் செயற்படும் போது அங்கே பிரச்சினைகளுக்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படும் இதனுடன் தொடர்புடையதாகவே இந்நிகழ்விற்கான இலக்குக் குழுக்களாக கணவன் மனைவி, சகோதர சகோதரியாக இருவரையும் இணைந்ததாக 12 குடும்பத்தவர்களை இணைத்து வீட்டின் சமையல் பொறுப்பில் ஆண்களின் பங்குபற்றலையும் அளவினையும் அதிகரிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.இதில் செய்முறையுடன் சமையல் நிகழ்வும் நடாத்தப்பட்டுள்ளது.

பெண்கள் இவ்வுலகில் வாழ்வதற்கும் சாதிப்பதற்கும் உரிமையுண்டு என உணர வேண்டும் இரண்டாவதாக ஆண்கள் பெண்களைக் குறித்த அவர் தம் மனப்பாங்கினை மாற்றிக் கொள்வது தேவையானதோர் விடயமாகும். பெண்கள் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளில் ஆண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும் இவ்வாறான செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் அம்மாற்றமானது முதலில் ஏற்படுத்த வேண்டிய இடமாக காணப்படுவது குடும்பமே

வீட்டினிலே வேலையை பாரபட்சமின்றி பகிர்ந்து கொடுப்பதால் அவர்கள் வளரும் போது பிரிவினைகளற்று பொறுப்புக்களை நிறைவேற்றுவர். இது போன்ற பண்புகளை நமது சமூகத்தில் விதைத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அன்றாட செயற்பாடுகளில் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பொறுப்புக்களில் சுமைகள் அதிகரிக்காத வகையிலும் புரிந்துணர்வுடன் கூடிய விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தி உளநெருக்கீட்டிற்கு உட்படாத வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன் குடும்ப வாழ்க்கையிலே மகிழ்ச்சியினை அதிகரிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.