வைத்தியர் சுதத் சமரவீரவை தொற்றுநோய் தடுப்பு பிரிவில் இருந்து நீக்க தீர்மானம்!


தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீரவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி வேறொருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தரவுகளை மறைக்கின்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை காரணங்காட்டி வைத்தியர் சுதத் சமரவீரவை பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த உண்மையான தரவுகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும், தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர இந்த தரவுகளை மறைக்கின்றார் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்களின் சங்கம் உள்ளிட்ட பலர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக செயலணிக்கூட்டங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், கொவிட் செயலணிக் கூட்டத்தில் நேரடியான வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் வைரஸ் பரவல் அதிகரிக்க தீர்மானம் எடுக்கும் தரப்பினர் தமது கடமை பொறுப்பில் இருந்து தவறியமையே காரணமாகும் எனவும் மாறாக மக்களை குறை கூற முடியாது. குறிப்பாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர பொறுப்புக்கூறியாக வேண்டும் எனவும் இவர்கள் நேரடியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் கொவிட் செயலணிக் கூட்டத்தில் சகல வைத்திய நிபுணர்களும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீரவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு தகுதியான வேறொருவரை அப்பதவிக்கு நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

எனினும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீரவை முழுமையாக ஓரங்கட்டாது அவரை வேறொரு துறைக்கு மாற்றவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.