காரைதீவில் எளிமையாக நடந்தேறிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74வது சிரார்த்ததின நிகழ்வு!


(வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74 வது சிரார்த்ததின நிகழ்வு அவர் பிறந்த காரைதீவு மண்ணில் எளிமையாக நேற்று (19) நடந்தேறியது.

காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சுகாதாரமுறைப்படி மட்டுப்படுத்தப்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு பணிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக இந்துக்களின் கொடியான நந்திக்கொடியை தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஏற்றியதும் புஸ்பாஞ்சலி செலுத்தி கீதம் இசைக்கப்பட்டது.

மணிமண்டப வளாகத்திலுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு அறங்காவலர் ஒன்றியத்தலைவர் இரா.குணசிங்கம் மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து சுவாமிகள் பிறந்த இல்லத்தில் மன்றச்செயலாளர் கு.ஜெயராஜியினால் விசேட பூஜை வழிபாடு நடாத்தப்பட்டது.

அடுத்து வளாகத்திலுள்ள மற்றுமொரு அமர்ந்தநிலையிலுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு தலைவர் சகா மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து பிரமுகர்கள் மாலைஅணிவித்து புஸ்பாஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அங்கு சிறப்புச்சொற்பொழிவை தலைவர் சகா நிகழ்த்தினார்.

சிரார்த்ததினத்தையொட்டி இராமகிருஸ்ணமிசனின் கல்லடி ஆச்சிரம் வழங்கிய ஒருதொகுதி நூல்த்தொகுதியும் அலுமாரியும் அங்கு கையளிக்கப்பட்டது.

மன்றச்செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.