பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர் ! நடந்தது என்ன முழு விபரம்


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார் என்று பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிசிடிவி காணொளிகளை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியால்கோட் நகரில் வாசிராபாத் சாலையில் இலங்கையர் தாக்கி, எரிக்கப்படும் நிகழ்வைக் காட்டுவதாகக் கூறி பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?

சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பிரியந்த குமார தியவடன மேலாளராக கடமையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் பரவியது.

"தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுதலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த முகமது பஷீர் என்பவர் கூறியுள்ளார்.

நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டிருந்தநேரத்தில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 11.35 மணியளவில் மீட்புதவி துறையினருக்கு இந்த நிகழ்வு தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர்கள் அங்கு செல்லும் முன்னரே பிரியந்த குமார தியவடன எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை கூறுகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்த மேலாளருக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை முதலே செய்திகள் பகிரப்பட்டு வந்தாலும், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சியால்கோட்டில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர் யாசிர் ராசா பிபிசி உருது மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இதுவொரு கொடூரமான சம்பவம் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் உஸ்மான் பஸ்தார் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதி இல்லை. மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமாட்டார்கள் என்பது உறுதி," என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த சம்பவம் தொடர்பில் ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

"இலங்கையைச் சேர்ந்தவர் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். விசாரணை நடத்தப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முழுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன," என பாகிஸ்தான பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கை அரசு சொல்வது என்ன?
உள்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலையைப் பராமரிப்பது கருதி பிரியந்த குமார தியவடன குறித்த தகவல்களை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்லை என்று இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரதமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மிக வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசு சார்பாக, இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.

பாகிஸ்தான் பிரதமர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றமையை தாம் வரவேற்பதாகவும் தினேஷ் குணவர்தன கூறுகின்றார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பிலான முழுமையாக தகவலை பெற்றுக்கொள்வதற்காக தாம் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

"பாகிஸ்தானில் தீவிரவாத கும்பலால் நிகழ்த்தப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை மூர்கத்தனமானது. அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதைப் பாராட்டும் அதே வேளையில், தீவிரவாத சக்திகள் சுதந்திரமாக உலவ அனுமதித்தால், அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.