சர்வதேச அழகுராணி நாவிதன்வெளியில் சரஸ்வதி அழகுசிலையை திறந்துவைத்தார்!

(காரைதீவு சகா)

ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேசஅழகி (MISS INTERNATIONAL UK -2020-2022) செல்வி இவஞ்சலின் லட்சுமணர் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) அவரால் நிறுவப்பட்ட 10அடி உயர  சரஸ்வதி சிலையை நேற்றுமுன்தினம் (20)ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திறந்துவைத்தார்.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர். இலங்கை சுற்றுலாஅதிகாரசபை அவர்களுக்கான விருந்தினர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் கூடவே அதன்பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.

பாடசாலை வளாகத்தில் நிறுவப்பட்ட சரஸ்வதித்தாயின் சிலை திறப்புவிழா வித்தியாலய அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சரஸ்வதித்தாயின் சிலையை உலகஅழகுராணி இவஞ்சலின் திறந்துவைக்க சிலைக்கான நினைவுபடிமக்கல்லை அவரது தாயார் சாந்திராஜகருணா திரைநீக்கம் செய்துவைத்தார். 

சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலை இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கௌரவஅதிதியாகக்கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் விசேடஉரை நிகழ்த்தினார்.

பின்னர் உலகஅழகி இவஞ்சலின் 'வணக்கம் நன்றி' எனும்வார்த்தைகளை தமிழில் பேசி உரையை ஆங்கிலத்தில் பேசினார். சகோதாரஇனத்தைச்சேர்ந்த அவரது தாயார் சாந்திராஜகருணா தமிழில் அழகாக உரையாற்றினார். பாடசாலைக்குத் தேவையான மேடை மற்றும் ஒலிபெருக்கி வசதிகளையும் செய்துதருவதாக அவர் உறுதியளித்தார்.

எதிர்வரும் அக்டோபரில் யப்பானில் நடைபெறவிருக்கும் உலகஅழகி தெரிவுப்போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும்  பிரித்தானிய உலகஅழகி இவஞ்சலின் வெற்றிபெறவேண்டி அங்கு இறை பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.

அதன்பின்னர் அவர்களால் குடியிருப்புமுனையில் நிருமாணிக்கப்பட்ட வீடொன்றினை வசதிகுறைந்த குடும்பமொன்றிற்கு வழங்கிவைத்து அதற்கான தளபாடங்களையும் வழங்கிவைத்தனர்.

1970களில் நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் அதிபராயிருந்த ராஜசிங்கம் அவர்களின் பேத்தியான இவர் பாரியபிரித்தானியாவின் அழகுராணியாக மூன்று தடவைகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவஞ்சலின் லண்டனில் பிறந்துவளர்ந்தவர். கிரிக்கட் வலைப்பந்து போன்ற விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அவர் அழகுக்கலையில் முத்திரைபதித்தவர்.