மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம்!


த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என த ஹிந்து நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன.

இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையிலா இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.