எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ள துரிதமாக செயற்படுங்கள் - விஜேதாச ராஜபக்ஷ


எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள், நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ள முறைமை மற்றும் குறித்த நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் , சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னம் உள்ளிட்டோரது பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு, கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தாபுரவினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலும் மற்றும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தல், கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் கடலில் கலந்த மாசுக்களை அகற்றுதல் தொடர்பில் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

கப்பல் தீ விபத்து தொடர்பில் இது வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி துரிதமாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இதன் போது ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி அல்விஸ், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியூமந்தி பீரிஸ், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதின செயலாளர் ஹசந்தி ஒருகொடவத்த, சுற்றுச்சூழல் அதிகாரசபையின் தலைவர் சிறிபால அமரசிங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.