100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை 50 பேரால் செய்ய முடியும் ! அரச நிறுவனங்களின் நிலவரம்


அதிக ஊழியர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிவோரை, குறைந்த ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக இலங்கை அரச ஊழியர்களின் தொழிற்சங்க சங்க அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது சில அரச நிறுவனங்களில் 100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை, 50 ஊழியர்களால் கூட செய்ய முடியும். எனவே, அதிக பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் இருந்து, போதுமான எண்ணிக்கையிலான பணியாளர்கள் இல்லாத நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஒதுக்கீடு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

அரச ஊழியர்களின் அதிகப்படியான பணிக்கு நீண்டகால தீர்வாக இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். என்றாலும், நீண்ட காலத்திற்கு அரசாங்கம் அதை முன்மொழிவதாகத் தெரியவில்லை, எனவே எதிர்கால அரசாங்கங்கள் மீண்டும் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் திட்டத்தை மாற்றியமைக்கலாம்.

அரசியல் ஆதாயத்திற்காக அரச துறைக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது வேலையற்றோர், குறிப்பாக பட்டதாரிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தும். இது ஒரு நீண்ட கால தீர்வாக இருக்க வேண்டும். அத்துடன் எதிர்கால அரசாங்கங்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக இதை மாற்ற அனுமதிக்க கூடாது. இதேவேளை நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்டதாரிகளை அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்யாமை அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும்.

எனவே அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் முடிவிற்கு எமக்கு ஆட்சேபனை இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை நிறுத்தி வைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அரச பணியில் உள்ள வெற்றிடங்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் அதிகப்படியான பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரச நிறுவனங்கள் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரச நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ அல்லது சேவைகளை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.