கட்டுமான பணிகளின் 95% திட்டங்கள் தாமதமாகிவிட்டதாக NCASL தெரிவிப்பு !



உள்ளூர் சந்தையில் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக 95% நிர்மாணப் பணிகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) தெரிவித்துள்ளது.

இது நிர்மாணத்துறையில் பணியாற்றும் பெருமளவிலான மக்களை கவலையடையச் செய்துள்ளது என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் பிரதித் தலைவர் எம்.டி.பெளல் தெரிவித்தார்.

கட்டுமானத் துறையில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் வேலை செய்கிறார்கள் என்றும் அவர்களில் 75% பேர் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டைல்ஸ், குளிரிரூட்டி வசதிகள் , மின்தூக்கி போன்ற கட்டுமானப் பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் கட்டுமானத் தொழிலை மேலும் சீர்குலைத்துவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக அரசாங்கம் கட்டுமானத் துறைக்கு 200 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும்.

இந்த கட்டுமானப் பணிகளில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள், நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

மேலும், இதுபோன்ற அரச திட்டங்களில் ஈடுபட்டுள்ள பல கட்டுமான நிறுவனங்கள் ஏற்கனவே வங்கிகளில் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.