இலங்கை கடற்பிராந்தியத்தில் டைனோசர்களின் காலத்துக்கு முற்பட்ட ஜெல்லிமீன்கள் கண்டுபிடிப்பு !இலங்கை கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்செயலான ஆய்வு செயற்பாடுகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் கடற்கரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டாலும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் ஜெல்லிமீன்கள் குறித்து முறையான ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.

இலங்கையின் வட மேல் மாகாண பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று இந்த விஞ்ஞானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முற்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் வசிப்பதாக முன்னர் அறியப்படாத குறைந்தது 10 இனங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பப்பட்டுள்ளன

இந்த ஆராய்ச்சியானது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்டு “Waya jel Survey” என பெயரிடப்பட்டது.

அறிவியலுக்குப் புதிதாக ஒரு ஜெல்லிமீன் இனத்தைக் கண்டுபிடித்தது இதன் சிறந்த பிரதிபலனாகும். பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆய்வுக்கு ‘கெரிப்டியா வயம்ப’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஜெல்லிமீன் இனம் இதுவாகும். அத்துடன் வடக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் நடத்தப்பட்ட உயிரியல் ஆய்வுகளில் கெரிப்டியா இனம் முதலாவது உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.