கிழக்கு மாகாண விளையாட்டுப் பேரவையின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆளுநரின் தலைமையில் ஆலோசனை !



(நூருல் ஹுதா உமர்)
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் பேரவை நேற்று  (20) முற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் கூடிய பாடசாலை மட்டத்தில் அடையாளம் காணும் விளையாட்டு வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வரை அவர்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு அமைப்புகளுக்கு அந்த விளையாட்டு வீரர்களை இடமாற்றம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்த திறமையான விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், அவர்களின் நல்வாழ்வுக்காக மாகாண விளையாட்டு நிதியை நிறுவவும் இதன்போது முடிவு செய்தனர்.

இதேவேளை, மாகாண விளையாட்டுத் திணைக்களத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்ஹ, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாண கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.டப்லியு. ஜி திஸாநாயக்க, மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் உட்பட மாகாண விளையாட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.