ரவிப்ரியா
15வது கழக தினம்சனியன்று (12) பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் ஏ.அகிலன் தலைமையில் நடைபெற்றது. பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ என் டுனாஸ் காந்தக் குருக்கள், பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய பங்கு தந்தை வண பிதா நிகஸ்ரன் பீற்றர்ஸ் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் வெகு விமரிசையாக அதிதிகளை பாண்ட் வாத்தியத்துடன் மாணவர்கள் சகிதம் அழைத்து வந்து, தேசியக் கொடி ஏற்றி, மண்டப நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டார்.கௌரவ அதிதிகளாக ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் என்.கமல்ராஜ் மற்றும் ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலய தலைவர் எம்.ஜெயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக பெரியகல்லாறு பிராந்திய வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஜி.சஞ்ஜே, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரம, மத்தியகல்லூரி அதிபர் வி.இராஜேந்திரன்இ உதயபுரம் தமிழ் வித்தியாலய அதிபர் எஸ்.சசிதரன் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ரி.கங்காதரன், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அனுஷகுமார், பொது சுகாதாரப் பரிசோதகர் சி.ஜீவிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து கழிவுப் பொருட்களைக் கொண்டு நுணுக்கமாக கலை அம்சத்துடன் அங்கத்தவர்களின் அர்ப்பணிப்பில் உருவான கவர்சிசிகரமான கலையரங்கு பலத்த கரகோஷத்தின் அதிர்வின் மத்தியில் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கத்தவர்கள் மேடையில் அணிவகுத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். வரவேற்புரை, வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டாரை ரசிகர்கள் வரவேற்பதற்கு நிகரான பாணியில் நல்லதொரு அறிமுக கவிதை முழங்க கம்பீரமாக கழகத்தின் ஆளுமைமிகு தலைவர் மேடையை அலங்கரித்தார்.
கழகம் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் சவால்களை விலாவாரியாக விபரித்தார். கடின பந்து விளையாட்டு மைதானத்திற்கான தடையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் பற்றி விளக்கி கூறியதுடன் இதற்கான தீர்வை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
அதிதிகள் வரிசையில் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் என் கமல்ராஜ், புனித அருளானந்தர் ஆலய பங்குத் தந்தை நிகஸ்ரன் பீற்றர், களுவாஞ்சிக்குடி பிராந்திய வைத்திய அதிகாரியும் கல்லாறு பிராந்திய வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியுமான டாக்டர் ஜி.சஞ்ஜே, மத்தியகல்லூரி அதிபர் வி.இராஜேந்திரன் உட்பட பிரதம அதிதியும் மாணவர்களின் போதைப் பொருள் பாவனை பற்றியே அவர்களின் உரைகளின் தொனிப் பொருளாக மாறியிருந்தது. அந்தளவிற்கு அது சமூக கட்டமைப்பிற்கான ஒழுக்க நெறிகளுக்கான மாபெரும் சவாலாக சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோல் மாணவிகள், இளைஞர்களால் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், அசௌகரியங்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்த விடயங்கள் குறித்து பெற்றோரும் சமூக அமைப்புக்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அத்துடன் மேற்குறித்த விடயங்கள் குறித்து பொலிசார் தீவிர கண்காணிப்பு செலுத்தி இவற்றை துரிதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையும் விழாவில் கலந்து கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரமவின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.
சிறந்த நடன நிகழ்வுகள் கண்களுக்குப் பெரு விருந்தாக அமைந்தது. நல்ல பயிற்சியுடன் மேடையை அலங்கரித்த மாணவர்கள் நடன ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதும் கவனத்தைப் பெறுகின்றது.
இந்நிகழ்வின் அரச பொது சுகாதார பரிசோதகரின் எஸ்.ஜீவிதனின் கொரோனான கால பணியை மெச்சி பாராட்டி கௌரவித்தது சிறந்த முன்னுதாரணமாகும். அதேபோல் கழகத்தின் முன்னணி வீரரும் கிரிக்கற் சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கற் நடுவராக நியமனம் பெற்ற ந.தனுசாந் (பாண்டு வாதிய பயிற்றுவிப்பாளர்) பிரதம அதிதியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் மிக மிக பொருத்தமான பெருமைக்குரிய விடயமாகும்.
அதேபோல் குறுந்திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்து சாதித்து வரும் லக்ஸ்மன் (சிறந்த கிரிக்கற் ஆட்டகாரர்) கௌரவிக்கப்பட்டதும் நிகழ்விற்கு பெறுமதி சேர்த்தது. அதேபோல் சமூக சேவையாளர்களான ச.கோபிநாத் மற்றும் ரி.சுதாகர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டதும் நிகழ்விற்கு முழுமை சேர்த்தது.
இந்நிகழவில் வழக்கம்போல க.பொத.உயர்தரம், மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இலக்கை எய்திய மாணவர்கள், சாதாரணதரப் பரீட்சையில் 9ஏ பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் என நினைவுச் சின்னம், சான்றிதழ் என்பன வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.
அத்துடன் கழகத்திற்கு பெருமை சேர்த்த கழக விளையாட்டு வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர். கல்வி, விளையாட்டு, பொதுச் சேவை என முக்கிய துறைகளில் முத்திரை பதித்து முன்னிலை வகிக்கும் இக்கழகத்தின் வெற்றிக்கு அதன் முகாமைத்துவமும், செயற்படுத்தும் திறனும், சமூகத்தில் பெற்றுள்ள நன்மதிப்பும் அடிப்படையாக அமைகின்றது.
அத்துடன் அதிதிகள் இம்முறை தங்களுக்கான வாய்ப்பை போதை வஸ்து பற்றிய விழிப்புணர்வு மேடையாக மாற்றியது நேரடியாக சமூகம் பற்றிய அக்கறையின் வெளிப்படையாக அமைந்தது, இன்றைய காலகட்டத்தின் பயனுள்ள அம்சமாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக கழக நாளை முன்னிட்டு வழக்கம்போல இரத்ததான முகாம் டிசம்பர் 3ந் திகதி பெரியகல்லாறு கலாசார மண்டபத்தி நடைபெறும்.