கதிர்காமம் பாதயாத்திரை சென்றவர் மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு!

கதிர்காமத்திற்கு சந்நிதியில்  இருந்து பாதயாத்திரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த யாத்திரிகர் ஒருவர் இன்று (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ். சந்நதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்த பாத யாத்திரை குழுவில் பங்கேற்று நேற்று (28) இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்து ஆலய வளாகத்தில் குறித்த நபர் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையில் குறித்த நபர் பணிஸ் உண்ட பின்னர் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.