நலன்புரி நன்மைகள் ஜூலை முதல் வங்கிக்கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்பதற்காக ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் ஒரு கட்டமாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் நிதி அமைச்சு உள்ளிட்ட தொடர்புள்ள அமைச்சு அதிகாரிகளின் பங்களிப்புடன் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், 40 சதவீதம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ள குடும்பத்துக்கு மாதம் 15 000 ரூபாவை அரசாங்கம் வழங்கும்.

ஜூலை முதல் அமுல்படுத்தப்படும் அஸ்வெசும நலன்புரி நன்மை முறைமையின் காரணமாக சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரிப் நன்மைகளைப் பெற்ற சிலர் அந்தச் சலுகைகளை இழக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், நிரந்தர வருமானம் உள்ளமை, விண்ணப்பிக்காமை போன்றன காரணமாக இந்த இழப்பு ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்கள் இருந்தால், உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், அது தொடர்பில் மேல்முறையீடு செய்யலாம். அல்லது ஜூலை மாதத்திற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்காக 37 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்குச் சென்று, அஸ்வெசும கைபேசிசெயலி மூலம் அவர்களின் வருமானம் மற்றும் செலவு பற்றிய தரவுகள் பெறப்பட்டன. இவ்வாறு, பிரதேச செயலக மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக தரவுகள் சரிபார்க்கப்படுகின்றன.

பின்னர் அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறத் தகுதியானவர்களின் பட்டியல் ஒவ்வொரு கிராம அலுவலர் அலுவலகத்திலும் நலன்புரி நன்மைகள் சபையினால் இணையதளத்திலும் https://www.wbb.gov.lk  வெளியிடப்படும். விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியிலில் இல்லாவிட்டாலோ உதவி பெற தகுதியில்லாத ஒருவரின் பெயர் இருந்தாலோ அது தொடர்பில் மேல்முறையீடு செய்யலாம். பயன்பெற தகுதியானவர்கள் எவரையும் கைவிடக் கூடாது என்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுதான் இங்குள்ள சிறப்பாகும்.

மேலும், முதல் முறை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனவர்களுக்கு ஜூலை மாதத்திற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் அது தொடர்பில் அறிவிப்போம் என்று நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.