புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் : தமிழ்த் தலைவர்களிடத்தில் அலி சப்ரி கோரிக்கை!

பிரிவினை கோரி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமையால் ஏற்பட்ட இழப்புக்களை நன்றாகவே உணர்ந்துள்ள தமிழ் தலைவர்கள், புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களின் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு சிக்கிக்கொண்டு மீண்டும் ஆயுதப்போருக்கு வழிசமைத்துவிடாதீர்கள் என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு அங்கீகாரம் வழங்காது என்ற யதார்த்தத்தினை புரிந்துகொண்டு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இனப் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட அனைத்து விடயங்களுக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை காண்பதற்கு தற்போது அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அடுத்தகட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வீரகேசரியிடம் பிரத்தியேகமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை காண வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை  பொறுத்தவரையில் அவர் முற்போக்கான ஒரு தலைவர். அவருடைய காலத்தில் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வினை காண்பதற்கு மிகவும் அரிதான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தினை தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்த் தரப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த சக்திகளுக்கு மாறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளன. அவர்கள் இலங்கையில் நிரந்தரமானதொரு தீர்வினை எட்டுவதற்கு இதயசுத்தியுடன் விரும்பவில்லை என்பது பல செயற்பாடுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் சார்ந்துள்ள நாடுகளில் அவர்களது வகிபாகத்தினை தக்க வைத்துக்கொள்வதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளை எமது நாட்டிலும் தமிழ் தலைவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தலைவர்கள் சிக்கிக்கொள்வதால் தமிழ் இளையோரின் எதிர்காலமே பாதிக்கப்படப் போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அத்தலைவர்களால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. இதனால் அந்தத் தலைவர்களுக்கு எதிராக இளைஞர்கள் மாறியதுடன், அவர்கள் தலைவர்களால் செய்ய முடியாததை தாம் ஆயுத வழியில் நிகழ்த்திக் காண்பிப்போம் என்று புறப்பட்டார்கள்.

இந்தத் தீர்மானம் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை சிதைத்துவிட்டது. அதிலும், தமிழ் மக்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் மிகவும் மோசமாக பாதித்துவிட்டது.

எனவே, இந்த விடயத்தில் தமிழ் தலைவர்கள் திறந்த மனதுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அதேநேரம், இந்தியாவை பொறுத்தவரையில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஒருபோதும் அங்கீகாரமளிக்காது. ஏனென்றால், இந்தியாவின் தென்பிராந்தியங்களில் அவ்விதமான சிந்தனைகள் கடந்த காலங்களில் தோன்றியிருப்பதால், மத்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதே யதார்த்தமானதாகும்.

ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தினை பொறுத்தவரையில்  பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, படிப்படியாக விடயங்கள் தீர்க்கப்படுவதற்கே நாமும் செயற்படுகின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்,  அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. எஞ்சிய சொற்ப அளவிலானவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று தான் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் உள்ளிட்டவை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினையானது அனைத்து சமூகங்களுக்குமானதாக உள்ளது. ஆகவே, அந்த விடயமும் உரிய அணுகுமுறையூடாக தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

முன்னதாக, நான் நீதியமைச்சராக கடமையாற்றியபோது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு வடக்கு, கிழக்கில் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனினும், அதற்கு சிறிய குழுவினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

அதேநேரம், மாற்றுத்திறனாளிகளாக உள்ள முன்னாள் போராளிகளுக்கு உண்மையிலேயே உதவிகள் தேவையாக உள்ளன. அரசாங்கத்தினால் அளிக்கப்படுகின்ற பகுதியளவிலான உதவிகளை பெற்று, வாழ்க்கையை முன்னகர்த்துபவர்களும் உள்ளார்கள்.

எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இந்த விடயத்தில் தமிழ் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.