வித்துவான், தமிழ் ஒளி, க.செபரெத்தினம் ஒரு சரித்திர நாயகன்

(Ravindramoorthy)
ஈழத்தின் தமிழ் இலக்கிய, இலக்கண புலமையாளர் பாரம்பரியத்தில் பாலபண்டிதர், பண்டிதர், வித்துவான், வித்துவ சிரோன்மணி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஈழத்திரு நாட்டின் கிழக்கிழங்கையில் பிறந்து தமிழ் வளர்த்து, தமிழ் காத்து பட்டம் பெற்ற அறிஞர் வரிசையிலே காரைதீவில் பிறந்து இலங்கையிலும்,
இந்தியாவிலும் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்ற சிறப்பு பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார், மண்டூரில் பிறந்த மகா வித்துவான் வி.சீ. கந்தையா, மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்த பண்டிதர் ச.பூபாலபிள்ளை, மண்டூரில் பிறந்த இலக்கிய கலாநிதி, புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்த தேசிகமணி அருணாசலதேசிகர் போன்றோர் வரிசையிலே வித்துவான், தமிழ் ஒளி க. செபரெத்தினம் அவர்களும் ஒருவராவார்.



இவர் பல்துறைப் புலமை பெற்று, பல பாத்திரங்கள் ஏற்று கல்வியிலும், தமிழிலும், சமயத்திலும் அகலக் கால்பதித்த அறிஞராவார். அந்த வகையிலே ஆசிரியராக, அதிபராக, கட்டுரை எழுத்தாளராக, கவிஞராக, நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, நாடக எழுத்தாளராக, நாடக இயக்குணராக, சமயப்பிரசங்கியாக, ஆய்வாளராக, அரங்கப் பேச்சாளராக தன்னைப் பரிணவித்துக் கொண்டவர்.

தமிழர் பண்பாட்டு மரபு வழுவாத பழம் பெரும் தனித் தமிழ் பதியான தம்பிலுவில் கிராமத்தில் பவுல் கனகரெத்தினம், எஸ்தர் சின்னாச்சி எனும் கிறிஸ்தவ தம்பதியருக்கு இளைய மகனாக 1930.09.24 இல் வித்துவான் அவர்கள் பிறந்தார். இவருடைய தந்தையாரும் தமிழில் புலமை பெற்று திகழ்ந்த ஒருவராவார். பவுல் கனகரெத்தினம் அவர்கள் 'இரட்சண்ய அம்மானை' எனும் கிறிஸ்தவ நூலினை எழுதி வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது தமிழ் மொழியிலான ஆரம்பக் கல்வியை தனது கிராமத்திலேயே பயின்றார். அதன் பின் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைப் பயின்றவர் உயர்கல்வியையும், ஆங்கில மொழிக் கல்வியையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்றார். தனது பாடசாலைக் கல்வியில் திறைமைச் சித்தி பெற்றெய்திய இவருக்கு அப் பாடசாலையிலேயே ஆசிரியர் நியமனமும் கிடைக்கப் பெற்றிந்தது. தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியப் பணியையும் தனது இரு கண்களாக மதித்து செயற்பட்டார்கள். சிறந்த தமிழ் ஆசிரியராக திகழ்ந்த இவர் நல்லூர் ஆசிரியர் கலாசாலை சென்று ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். அத்துடன் 1960களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வித்துவான் பட்டத்தையும் பெற்று மீண்டும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கு தமிழ் இலக்கண, இலக்கியப் பாடங்களை சிறப்பாக கற்ப்பிக்கும் ஆசிரியராக பரிணமித்தார்.

தொடர்ந்து பல்கலைக்கழக 'கலைமானி' பட்டம், கல்வி டிப்ளோமா என்பவற்றைப் பூர்தி செய்த இவருக்கு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் பதவி உயர்வு கிடைக்கப்பெற்றது. பின் பழுகாமம் மகா வித்தியாலயம், களுதாவளை மகாவித்தியாலயம், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் என்பவற்றில் ஆளுமை மிக்க அதிபராக கடமையாற்றி, பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்திலேயே பதவி நிலை ஓய்வும் பெற்றார்.

வித்துவான் அவர்கள் தனது உரை ஒன்றிலே குறிப்பிட்டிருந்தார், தனக்கு 17 வயதாக இருக்கும் போது இறைபதம் அடைந்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் புனித உடல் சிவானந்தா மகாவித்தியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த போது தமது பாடசாலை ஊடாக தம்மை அழைத்து சென்று காட்டியதாகவும், தான் சுவாமியின் புனித உடலை பார்த்த போது தன்னில் ஒரு சக்தி மாற்றம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அன்றில் இருந்து சுவாமி விபுலானந்த அடிகளாரை தனது மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

வித்துவான் அவர்கள் சுவாமி விபுலானந்த அடிகளார் மீது கொண்ட அளப்பெரிய பக்தியின் காரணமாக அவர் கடமையாற்றிய பாடசாலைகளில் எல்லாம் சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலையை நிறுவி அதிலே,

'வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது'

எனும் சுவாமி விபுலாந்தருடைய பாடலில் வருகின்ற 'உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது' எனும் கவிதை வரிகளையும் பொறித்துள்ளார்.

இவர் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் சுமார் 25 மேற்பட்ட இவரின் கட்டுரைகள் வெளியாயிருந்தன. ஈழத்து தமிழ் அறிஞர்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளாக இவற்றில் பல அமைந்திருந்தன.

1962 இல் இவர் எழுதிய ' வாழையடி வாழை' என்னும் நூலில் கிழக்கின் மைந்தன் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களதும், வடக்கின் மைந்தன் பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை அவர்களதும். சரித்திரத்தை அவர்கள் இருவரும் உயிருடன் இருக்கும் போதே ஆய்வு செய்து இவரும் சரித்திரமானார். 1994 இல்  எழுதிய 'சுவாமி விபுலானந்தரின் வாழ்வும் வளமும்' எனும் நூலிலே சுவாமி விபுலானந்த அடிகளாரது வரலாற்றை இரத்தின சுருக்கமாகவும் அதே வேளை அடிகளாரது சிறப்புகள் விடுபடா வண்ணமும் வடித்திருந்தார். 2000 ஆம் ஆண்டில் எழுதிய 'நயனம் பேசுகிறது' எனும் சிறுகதையானது அக்கால கட்டத்தில் அறிஞர்கள் மட்டுமல்லாது அனைவராலும் பேசப்பட்ட சிறுகதையாக மிளீர்ந்திருந்தது.

2002 இல்  எழுதிய 'ஈழத்து சான்றோர்' என்னும் ஆய்வு நூலில் ஆறுமுகநாவலர் தொடக்கம் பல ஈழத்து தமிழ் பேரறிஞர்களை ஆய்வு செய்து அவர்களின் சிறப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகம் உணர்ந்து கொள்ளச் செய்தார். இதே போன்று 2005 இல் எழுதிய 'தமிழ் நாடும் ஈழத்து சான்றோரும்' எனும் நூலில் ஈழத்து சான்றோர்களையும் தமிழ் நாட்டு சான்றோர்களையும் ஆய்வு செய்து அவர்களின் அளப் பெரிய சிறப்புக்களை உணர்த்தியிருந்தார். மேலும் 2003 இல்  எழுதிய 'கிழக்கிலங்கையின் புகழ் பூத்த மண்ணின் மைந்தர்கள்' எனும் தொகுப்பு நூலில் கிழக்கிலங்கையின் மூலை முடுக்கெல்லாம் இலை மறை காயாக மறைந்திருந்த சுமார் 18 இக்கும் மேற்பட்ட தமிழ் புலமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

மேலும் 2009 இல் எழுதிய 'நினைவில் நின்றவை' கலிநாயகர், கந்தவனத்தின் கவிதை நயம் போன்றன இரசணை மிக்க நூல்களாகும். 2010 ஆம் ஆண்டு இவரது 80 வது அகவையில்  பழுகாமத்து மக்களால் இவருக்கு எடுக்கப்பட்ட பெரு விழாவிலே அதுவரை அவர் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் யாவற்றையும் தொகுத்து ' உள்ளக்கமலம்' எனும் பெயரிலே வெளியீடு செய்திருந்தார்.

1993 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சாஹித்திய விழாவிலே இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு இவரின் தமிழ் பணியைப் பாராட்டி 'தமிழ் ஒளி' எனம் பட்டம் வழங்கி கௌரவித்தது. 2004 ஆம் ஆண்டு இவரது தமிழ் பணியை சீர் தூக்கி மதிப்பீடு செய்த கிழக்குப் பல்கலைக்கழகம் 'முதுமானி' பட்டம் வழங்கி கௌரவித்தது.

வித்துவான் அவர்கள் பதவி நிலை ஓய்வு பெற்ற பின் எமது நாட்டில் நிலவிய யுத்தக் கெடுபிடிகளால் அல்லலுற்ற மக்களுக்கு அப்போது உருவாக்கப்பட்டிருந்த பிரசைகள் குழுவின் தலைவராக இருந்து துயர் துடைத்த அதே வேளை பல அளுத்தங்களுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் பின் கனடா நாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்று அங்கு 'சுவாமி விபுலானந்தர் கலை மண்றம்' ஒன்றை அமைத்து அதன் மூலம் கனடா நாட்டிலே தமிழ் வளர்க்க தொடங்கினார். அங்கு வெளிவருகின்ற உதன், செந்தாமரை, தமிழ் செந்தாமரை போன்ற பத்திரிகைகளில் இழத்து தமிழ் அறிஞர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.  இவர் அங்கு காட்டிய முத்தமிழ் வித்தகத்தையும் பாராட்டி, கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் 'நிறைகுடம்' என்னும் பட்டத்தை வழங்கியதுடன் 2006 ஆம் ஆண்டு இவரது 75 வது அகவையில் பவள விழா எடுத்து 'வித்துவரெத்தினம்' எனும் சிறப்பு பட்டத்தையும் வழங்கி கௌரவித்தது.

வித்துவான் அவர்கள் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை சாஹித்திய மண்டலத்தின் கவிதைக் குழு உறுப்பினரில் ஒருவராக திகழ்ந்தார். அத்துடன் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்சபை உறுப்பினராகவும், 1968 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் பொதுச்சபை செயலாளராகவும் இருந்து தமிழுக்கு பெரும் சேவையாற்றினார். அதன் பின் எமது பிரதேசத்தில் நிலவிய யுத்த காலநிலை காரணமாக செயலற்றிருந்த மட்டக்களப்பு தமிழ் சங்கத்தினை இவர் 2010 ஆம் ஆண்டு தாயகம் வந்த போது மீண்டும் புனரமைத்து அதன் காப்பாளராக செயற்பட்டதுடன் தமிழ் சங்கத்திற்கென ஒரு கட்டடத்தை அமைப்பதற்கு தேவையான நிதியினை புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளிடம் இருந்து திரட்டி அனுப்பிக் கொண்டிருந்தார். கட்டடம் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த நேசம்மா ஆசிரியையை 1956.08.15 ஆந் திகதி துணைவியாக்கிக் கொண்ட இவருக்கு அமுதன், ஆனந்தன், செல்வி, நளினி என நான்கு பிள்ளைகள் உள்ளனர். அமுதன் மட்டக்களப்பில் கிறிஸ்தவ போதகராகவும், ஆனந்தன் அவுஸ்ரெலியாவில் பொறியியலாளராகவும், செல்வி ஸ்கொட்லாந்திலும், நளினி கனடாவிலும் வாழ்ந்து வருகின்றனர். தனது இளைய மகளுடன் கனடாவில் வாழ்ந்து வந்த மதிப்பிற்கும், கௌரவத்திற்குமுரிய வித்துவான், தமிழ் ஒளி அவர்கள் இலங்கை நேரப்படி கடந்த 29.12.2013 அன்று அதிகாலை 2.00 மணியளவில் இறைபதம் அடைந்தார்.

தமிழ் ஆய்வுத் துறையில் தடம் பதித்து தனக்கென தனி வழி தேடி, தமிழாகி மீன்பாடும் தேன் நாட்டின் தமிழை உலகிற்கு ஊட்டி, தமிழோடு சங்கமித்து விட்ட வித்துவப் பெருந்தகை தமிழ் ஒளி க. செபரெத்தனம் ஐயா அவர்களின் ஆத்மா நிச்சயம் இறைபதம் சேரும், அதில் ஐயமில்லை நாமும் பிராத்திற்போம். ஓம் சாந்தி;;... சாந்தி... சாந்தி...
அன்னாரின் மாணவன்

வி.ரவிந்திரமூர்த்தி (ஆசிரியர்)
மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை
களுவாஞ்சிகுடி