
2004.12.26 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை; எமது வரலாற்றில் மறக்க முடியாத துயரத்தை உண்டு பண்ணிய நாள்.
இன்றுடன் பத்து வருடங்கள் நிறைவு பெறுகின்றது.
அந்த அனர்த்தம் பல்வேறு அனுபவங்களை நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியது.
அந்த அனுபவங்களின் பதிவாக இரு கவிதைகள்
சுனாமி மார்கழி 2004
முன்பின் அறிந்திராத வார்த்தை
மறக்கவே முடியாத பயங்கரமாக
இறங்கிற்று ஆழமாய் மனதுள்
அச்சம் தருவது கடற் பயணம்
எனினும் ரம்மியமான
கடலும் கரையும்
கரையும் அலையும்
எமக்குரியதாக அற்றைவரை.....
சுழித்தெழும் சிற்றலைக்கும்
மனதுள் சிலிர்க்கும் பீதி
ஓயாது இனி
ஆயினும்
நெஞ்சுள் மலையென் நிமிர்ந்தது
மனிதம்
கொன்றவரைக் கொன்றவர்
மோதிக் கொன்றவர்
முரண்பட்டு நின்றவர்
மறைந்தனர்
எல்லாம் மறந்து
உயிர் பெரிதென்று
காப்பாற்றி வந்தனர்
ஆளையாள் கரை
(சி. ஜெயசங்கர்)
சுனாமி
நொடிப் பொழுதுகளில்
இல்லையெனில்
நிமிடங்களில்
வந்து அது உசுப்பிற்று
உயிர்காக்கும் ஓட்டம்
அன்னையரும் தந்தையரும்
கணவன்மாரும் மனைவியரும்
காற்றில் கலந்த சாம்பலென
கலைந்த போயினர் காணாமல்
எல்லைகள் அறியாதது
அந்தப் பேரழிவு
பித்துப் பிடித்து
உறவுகள் தேடி
வீணாகிப் போன வேளையில்
நண்பர்களாயினர் எதிரிகள்
தன்னுள் மரணித்துப் போனவரை
கடல்
கைவிட்டுப் போயிருந்தது
கரைகளில்
கணக்கற்று சடலங்கள்
நிமிடங்களுக்கு முன்னர்
இருந்தவர் திரிந்தவர்
நிறைத்துக் கிடந்தனர்
சவக்காம்பிராக்களை
மரணத்தின் உறைந்த கரங்களால்
குடும்பங்கள் கொளுத்தப்பட
யார் புலம்ப யாருக்காக...
ஆங்கில் மூலம்: பி(கு)றாங் மக்கே அனிம்-அப்பியா,
(கானா நாட்டுக் கவிஞர்)
தமிழில் சி;; ஜெயசங்கர்








.jpg)



