கண்ணகி வழிபாட்டின் தோற்றுவாயான கண்ணகி கோட்டம் - ஒரு நோக்கு-


( கவிக்கோ வெல்லவூர்க்கோபால்)

             கண்ணகி வழிபாட்டின் தோற்றத்தினை அன்றைய முத்தமிழ் நாடுகளின் முதன்மைபெற்ற நாடாகக்  விளங்கிய சேர நாடே கொண்டிருந்தது. சேரன் செங்குட்டுவனுக்கு மலைவாழ் மக்களால் சொல்லப்பட்ட சம்பவங்களின் பின்னணியிலேயே
சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால்  பாடப்பட்டதாகக்  கொள்ளப்படும். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுமென்பதுவும், சூழ்வினைச் சிலம்பு காரணமாகச், சிலப் பதிகாரம் என்னும் பேரால், நாட்டுதும் நாமோர் பாட்டுடைச் செய்யுள” எனவரும் தொடக்கப் பாடலே  அதன் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகும். கற்புக்கரசி கண்ணகிக்கு  சிலையெடுக்க வேணவாக்கொண்ட செங்குட்டுவன் அதற்காக இமயம் சென்ற தகவல்களை சிலப்பதிகாரம் மாத்திரமன்றி பத்துப்பாட்டின் ஐந்தாவது பத்தும் வெளிப்படுத்தும். இதற்காக அவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் செங்குட்டுவனும் அவனது படைகளும் கங்கை நதியினைக் கடந்து வடபகுதி செல்ல  கலிங்கத்தின் சாதவாகன மன்னன் கௌதமிபுத்ர சாதகாணி துணைபுரிந்தமையும் தகவல்களாகவுள்ளன. அக்காலகட்டத்தே சதவாகனர்களும் சேரர்களும் மிக்க நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தமை வரலாற்றுப் பதிவாகும். கங்கையைச் செங்குட்டுவன் கடந்த  பின்னர் அங்கு கனகன் மற்றும் விசயன் போன்ற மன்னர்கள் அவனை எதிர்கொண்டபோது அவர்களுடன் பொருது அவர்களைச் சிறைப்பிடித்தான். அதன் பின்னர் இமயத்தில் கல்லெடுத்தான் என்பது வரலாறு. இதற்காக மூன்றாண்டுகள் சென்றதாகவும் வேறு சில ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. இதில் நெடுவேற்குன்றத்தில் கோட்டமமைத்து சிலைவைக்கும் பணியில் பல இந்துமதக் குருமார், ஞானிகள், சோதிடர்கள், சிற்பிகள், கைதேர்ந்த ஓவியர்கள், சிறந்த கட்டிடக் கலைஞர்கள் எனப் பலரதும் ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும்  அறியப்படுகின்றது. கி.பி 114ல்  இடம்பெற்ற மிகப் பிரமாண்டமான சிலையெடுப்பு விழாவினில் வடநாடு உட்பட ஏனைய நாடுகளிலிருந்து அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட அரசர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டும் விழாவினில் கலந்துகொள்ளவும் அனுமதிக்கப்பட்டதோடு குடகு, கொங்கணம், மாளுவம் போன்ற நாட்டரசர்களுடன் இலங்கை வேந்தன் கயபாகு மற்றும்  பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும் சோழவேந்தன் பெருநற்கிள்ளியும் கொங்கு வேந்தனும் அழைக்கப்பட்டிருந்தனர்.                                      தனது தந்தையான நெடுஞ்சேரலாதனின் பிறந்த தினத்திலே கண்ணகிக்கு முதல் விழாவெடுத்த செங்குட்டுவன் கண்ணகி கோட்டத்தினை மும்முறை வலம்வந்து நாட்டுமக்களுக்கு கண்ணகி பெயரால் வாழ்த்துரை வழங்கினானெனவும் கூறப்படுவது அறியக்கிடக்கின்றது.


கண்ணகி கோட்டம் (சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை வைத்த பீடம்)


        தமிழகத்தின் மேற்கு மலைத்தொடரில் அமைந்த நெடுவேல் குன்றத்தில்  கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளியில் கேரளமக்களால் வண்ணாத்திப்பாறை என்று அழைக்கப்படும் நெடுங்குன்றமேயது.  தமிழக – கேரள எல்லையில் ஐயாயிரம் அடி உயரத்தில் இப்பாறை தென்படுகின்றது. இக்குன்றினை மங்கலதேவி மலையெனவும்  கூறுவர். தற்போது அங்கு தென்படும் 200 சதுர அடிப் பீடத்தின் மேலேயே கண்ணகி சிலை வைக்கப்பட்டதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதற்கென இரு வாயில்களிலும் அமைக்கப்பட்டிருந்த மகரதோரணங்களை அழிபாடுற்ற நிலையில் இன்றும் அவதானிக்க முடியும். இதன் தமிழகத்தினூடான கிழக்குப் பக்க நுழைவாயில் பெரிதாக கி.பி 10ம் நூற்றாண்டுக்குரிய கட்டிட அமைப்பினை  கொண்டுள்ள நிலையில்  மேற்குப்  பக்க நுழைவாயிலானது  சிறியதாகவும் கி.பி 2ம் நூற்றாண்டுக்குரிய கட்டிட அமைப்பினையும் கொண்டுள்ளமை தெரிகின்றது. இதன் காரணமாகவேதான் சேரன் செங்குட்டுவன் இக் கோட்டத்தினை அமைத்தபோது  இதற்கான பாதை சேரநாட்டினூடாவே அமைந்திருந்ததென அறியமுடிகின்றது. அத்தோடு 1ம் ராஜராஜ சோழனால் அங்கு கட்டப்பட்ட ஆலயமும்  எழுதப்பட்ட வட்ட கல்வெட்டும் கி.பி 10ம் நூற்றாண்டுக்குரியதென்பதால் கிழக்கு வாயில் மகரதோரணத்தினை ராஜராஜனே அமைத்தான் எனவும் துணியலாம். அவனது வட்டக் கல்வெட்டு அங்கு கோவில்கொண்ட கண்ணகியை ஸ்ரீ பூரணி எனக் குறிப்பிட  குலசேகர பாண்டியனுடைய தமிழ்க் கல்வெட்டு அவளை ஸ்ரீ பூரணிகிரி ஆளுடை நாச்சியார் எனக் குறிப்பிடுகின்றது. ராஜராஜனது இவ்வாலயம் தற்போது அழிவுற்றுக் கிடப்பதை நம்மால்  காணமுடியும். அங்கிருந்த அம்மனின் விக்கிரகமும்  சிதைந்த நிலையிலேயே தென்படுகின்றது.


         அழிபாடுற்றுள்ள கண்ணகி கோட்ட நுழை வாயில்




  இன்று வருடத்திற்கொருதடவைசென்று வழிபாடியற்றும்  இரசராசனின்; கண்ணகி கோவில்  



           இராசராசனின் வட்டக் கல்வெட்டு கி.பி 10ம் நுற்றாண்டு







        இராசரானின் அழிபாடுற்ற கண்ணகியின் மூலக் கோவிலும்  விக்கிரகமிருந்த பீடமும்


குமிளியில் அழிவுற்றுக்கிடந்த கண்ணகி கோட்டத்தினை தனது பதிநான்கு ஆண்டுகால பெரு முயற்சியின் பின்னர் மீளக் கண்டுபிடித்த  ஆய்வாளரும் அறிஞருமான பேராசிரியர் – முனைவர் சி.கோவிந்தராசனார் அங்கு தலைப்பாகம் சிதைந்த நிலையில் ஒரு கால் சற்று மடிந்தும் மறுகால் நின்ற நிலையிலும் கண்டெடுக்கப்பட்ட  இரண்டடி உயரமான கண்ணகி சிலையானது அதனது அமைப்பியலில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்ததென குறிப்பிடுகின்றார். அங்கே சிதைவுற்றுக் கிடக்கின்ற அதே காலத்துக்குரிய  செங்குட்டுவனின் கண்ணகி கோட்டமும் சுமார் 1000 ஆண்டுப் பெருமையோடு அதன் அருகில் காட்சிதரும்; சேரநாட்டை வெற்றிகொண்டு வஞ்சியைத் தளமாக்கிய ராசராச சோழனின் வட்டக் கல்வெட்டும் அவனால்  கட்டப்பட்டு அழிபாடுற்றுக் கிடக்கின்ற ஆலயமும் வடக்கு மற்றும் தெற்கில் அமைந்திருந்த  மகர தோரணங்களின் கற் தூண்களும் இன்றும் வரலாற்றுப் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தமிழகத்தினதும் கேரளத்தினதும் எத்தனப் போக்கால்  எழுந்துள்ள உரிமைப் பிரச்சனையானது கவனிப்பாரற்ற தன்மையினையே ஒரு வரலாற்றுச் சின்னத்தை உலகறியாது மறை பொருளாக்கியிருக்கின்றது. அத்தோடு இந்திய மத்திய அரசின் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ள இப்பிரதேசத்தே இது வரை போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையும் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாமையும் கவலைக்குரியதாகவேயுள்ளது.
        1962 வரை சித்திரைப் பௌர்ணமியை ஒட்டியதாக அங்கு ஒரு வாரம்வரை இடம்பெற்றுவந்த விழாவானது கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடு காரணமாக மூன்று நாட்களாக குறைக்கப்பட்டுப் பின்னர் ஒரு நாளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வருடத்தில் ஒரு தடவை   சித்திரைப் பௌர்ணமி தினத்தின் பகல்பொழுது மாத்திரம் அங்கு மக்கள் சென்று திரும்பிவர மிகுந்த கட்டுப்படுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.   சித்திரைப் பௌர்ணமி  தினம் அதிகாலை ஐந்து மணிக்குள் மலையேறப் புறப்பட்டால்தான் பத்துப் பதினொரு மணியளவில் கண்ணகி கோட்டத்தை அடைந்து மதியப் பூசையில் பங்குகொண்டுவிட்டு மீண்டும் மாலை ஐந்து மணிக்குள் திரும்பி வரமுடியும் எனும் நிலையில் ஒரு வாரம் கண்ணகிக்கு விரதமிருந்து அம்மனை வழிபடும் பக்தர் கூட்டம் அங்கே பெருகிவருதை அவதானிக்கமுடியும். இங்கு வரும் அனைவருக்கும் விபூதி, குங்குமம், மஞ்சள் என்பவை வழங்கப்படுவதுடன் ஆலயத்திற்கு வெளியில் தயிர்ச் சாதம், எலுமிச்சைச் சாதம், தக்காளிச் சாதம் என்பவையும் கொடுக்கப்படுகின்றது.

 தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் தெற்கெல்லையிலுள்ள கூடலூர் - பளியன்குடியிலிருந்து அத்தியூற்று மற்றும் மூங்கிலோடை ஊடாக ஆறு கிலோமீற்றர் மலையேறியும்  அன்றேல் கேரளாவின் குமுளியிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீற்றர் தூரம் அடர்ந்த வனத்தினூடாக நடந்தும் - அதன் பின்னர் மலையேறியும் கண்ணகி கோட்டத்தை அடையமுடியும். இந்த இருவழிப் பாதைக்கும் குறித்த ஒரு தினத்திலேனும் இவ்விரு மாநில அரசுகளும் தக்க பாதுகாப்பினை இன்றுவரை அளிக்காதுள்ளமை மிகவும் வேதனையானதே. இந்திய மத்திய அரசுகூட இதில் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. இன்று கண்ணகியின் கோட்டத்தில் அவளது தெய்வீகச் சிலை இல்லாமல் சுமார் 200 சதுர அடியினைக்கொண்ட அழகிய பரந்த பீடமே அங்கு தென்படுகின்றது. கேரளத்தில் பிராமண ஆதிக்கம் வலுப்பெற்ற காலத்தில் அவ்வழகிய   கற்சிலை சிதைக்கப்பட்டுவிட்டதாக அதற்கு கவலையோடு பலர் காரணம் கூறுவர். அத்தோடு கோட்டத்திலிருந்த அழகிய விக்கிரகமும் காணாமல் போய்விட்டது. எனினும் ராச ராசனால் கட்டப்பட்ட கோவிலிலுள்ள சந்தணச் சிற்பத்தில் பதிக்கப்பட்ட வெள்ளியினாலான கண்ணகியின் முகத்தை (முகக்களை) பக்தர்கள் இன்று தரிசித்து வருகின்றனர். அங்கு ஒரு சிவாலயமும்  தென்படுகின்றது. தமிழ்நாட்டு அர்ச்சகர்களே இங்கு பூசைகளை மேற்கொள்ளுகின்றனர்.

சுமார் 1900 ஆண்டுகால பழமைமிக்கதும் கண்ணகி வழிபாட்டின் தோற்றுவாயாகக் கொள்ளப்படுவதுமான கண்ணகி கோட்டத்தின் அமைவிடம் குறித்த தமிழக – கேரள மாநிலங்களின் எல்லைப் பிரச்சனையால் அதன் சர்வதேசப் புகழ் உரிய இடத்தை எட்டவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகத் தொடர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். 1817ல் கிழக்கிந்தியக் கொம்பனி நடாத்திய சர்வேயில் (நில அளவை) கண்ணகி கோட்டம் தமிழக எல்லைக்குட்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்னர் 1893, 1896,1913 மற்றும் 1915 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நில அளவை மற்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட வரைபடங்கள் போன்றவையும் இதனையே வலியுறுத்துவதாக அமைந்தன. 1976ல் தமிழக – கேரள மாநிலங்களின் அரசு அதிகாரிகள் கூட்டாக நடாத்திய நில அளவையில் கண்ணகி கோட்டம் கேரள எல்லையிலிருந்து நாற்பது அடி தொலைவில் தமிழக எல்லைக்குள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இருப்பினும் கேரள மாநில அரசு தனது நிலையை இதுவரை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசின் வசம் கண்ணகி கோட்டம் வந்தால் மாத்திரமே அதன் சிறப்பு உரிய இடத்தை எட்டமுடியும்.


சேரன் செங்குட்டுவன் கி.பி 2ஆம் நூற்றாண்டில் கொடுங்களுரில் அமைத்த
                 முதல் கண்ணகி கோவில்




இன்று பழைய கோவிலுக்கு அருகாமையில் பகவதியாக பெயர்மாற்றம்  கொண்ட கொடுங்களுர் கண்ணகி கோவில்