யாவரையும் கவரும் கதிர்காமம்.

ஆகமம் சார் வழிபாடுகளிற்கு அப்பால்.. இவற்றின் தாக்கங்களுக்கு அப்பால்.. தாங்கள் இந்துக்கள் என்றே சொல்லிக் கொள்ளாத மக்களிடத்தும்.. வேடுவப் பழங்குடியினரிடத்தும்.. புதிய புதிய வெவ்வேறு பட்ட விதவிதமான சடங்குகள், சம்பிரதாயங்களுடன் இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் முக்கிய வழிபாடு கதிர்காமமுருகன் வணக்கம்.



யாவரையும் கவரும் கதிர் காமம்.

பல்லின- பல்மத மக்களின் சங்கமமாக அன்றைக்கும் இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் கதிர்காம முருகன் ஆலயம். இலங்கைத் தீவின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தின் புத்தளப் பிரிவிலுள்ள ‘தியனகம’ என்ற காட்டின் நடுவில் இந்தக் கதிர்காமத்தலம் இருக்கிற கதிர்காம மலை உள்ளது.
இந்தக் கதிர்காமத்தின் பண்பாட்டு மூலம் தொன்மையுள் அமிழ்ந்திருக்கிறது. கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமான முறையில் சமூக- மானிட- அரசியற் காரணிகளால் இது மூடப்பட்டுக் கிடக்கிறது.

உதாரணமாக, கதிர்காமத்தை தமிழில் கதிர்காமம் என்று அழைத்தாலும், சிங்களத்தில் கதரகம என்று அழைக்கிறார்கள். இப்படி இத்தலத்திற்குப் பெயர் வந்தமைக்கான காரணமும் பெரும் புதிராகவே இருக்கிறது.

கார்த்திகேய கிராம, கஜரகம என்பவற்றின் திரிபே கதிர்காம என்று கொள்வோரும், இல்லை இது கதிர் (ஒளி) காம (அன்பு) நிறைந்த இடம் என்று தூய தமிழ்ச் சொல்லாகப் பொருள் கொள்வோரும், கதிரு என்ற சிங்களச் சொல்லின் மரூஉ எனக் கொள்வோரும், இன்னும் பலவாறாகச் சொல்வோரும் உளர். இங்கு கூட ஆய்வாளர்கள் தமது இனத்துவ அடையாளமாக கதிர்காமத்தைக் காட்ட முயற்சிப்பதையே காண முடிகிறது.

இன்றைக்குச் சிங்களவர்களும் தமிழர்களும் இஸ்லாமியர்களும் சென்று வழிபடும் திருக்கோவிலாக விளங்குகிற கதிர்காமத்தை தங்களின் தொன்மையான குடியேற்றங்களுள் ஒன்றாக சிங்கள பௌத்தர்கள் அடையாளப் படுத்துகிறார்கள்.

சிங்கள மொழி இலக்கியமான ‘ஸ்கந்தஉபாத’ என்கிற நூலில் தமிழரசனான எல்லாளனை வெல்வதற்கு துட்டகைமுனு மன்னனுக்கு கதிர்காமக் கடவுள் அருள் செய்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை வரலாறு பேசும் சிங்கள இலக்கியமான மகாவம்சமும் கதிர்காமத்தை சிறப்பித்துச் சொல்கிறது. இவற்றின் காரணமாக, இன்றைக்கும் கதிர்காமம் பௌத்தமத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழேயே நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.

ஆனாலும், இலங்கையில் வாழும் தமிழ் இந்துக்கள் தங்களின் தனிப்பெருங்கடவுளாக கதிர்காம ஆண்டவனைக் கருதுகிறார்கள். கந்தபுராணத்திலுள்ள ஏமகூடப் படலத்தில் இந்தக் கதிர்காமச் சிறப்புச் சொல்லப் பட்டிருக்கின்றமையும், இன்னும் அருணகிரிநாதரால் திருப்புகழ்கள் பாடப் பெற்றிருப்பதும் இன்ன பிறவும் இந்த பற்றுக்கும் பக்திக்கும் முக்கிய காரணமாகும்.

தொல்காப்பியம் பேசும் கந்தழி வணக்க முறையான வாய்கட்டி வழிபாடு செய்யும் முறைமை இன்று வரை கதிர்காமத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டும் தமிழறிஞர்கள் திருமுருகாற்றுப்படை பேசும் ஐந்தாம் படை வீடும் கதிர்காமமே என்று குறிப்பிடுகிறார்கள்.

இவற்றின் காரணமாக, 1908ஆம் ஆண்டு முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள் என்றாலும், அவைகள் எவையும் சாத்தியமாகவில்லை.

இன்றைக்கு கப்புறாளைமார் என்கிற சிங்கள இனத்தவர்களே வாய்கட்டி திரைக்குப் பின்னால் முருகனுக்கு இங்கு பூஜை செய்கிறார்கள். இதனை விட அதிசயம் என்ன என்றால் இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை பரமரஹஸ்யமாகவே இருக்கிறது.

ஆனால், இவ்வகை வழிபாடுகளுக்கு அப்பால் இன்றைக்கும் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், முள்ளு மிதியடி என்று இந்து மத வணக்க முறைகள் அங்கே பல்லின மக்களாலும் விருப்போடு ஆற்றப்பெற்று வருகின்றன. ஆங்கே ஒரு மலையிலிருந்து கிடைக்கும் வெள்ளைக் கட்டிகள் (திருமண் போன்றது) திருநீறு என்று கதிர்காமம் வரும் பல்லின மக்களாலும் பக்தியுடன் அணியப்படுகிறது.

சிங்கள மக்கள் ‘கதிரகம தெய்யோ’ என்று வழிபாடாற்றுகிறார்கள். இவற்றினை தடுக்க இயலாதவர்களாக பௌத்த குருமார்களே இவற்றைச் செய்வதற்கு தம் மத மக்களுக்கு ஆசி வழங்க வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் என்றால் கதிரையாண்டவனின் ஆலயத்தின் பேரில் மக்களுக்குள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டை என் என்பது..?

அங்கே வாழும் பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று கந்தனைப் போற்றுகிறார்கள். வள்ளி திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இப்படியே சிங்கள, தமிழ் மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. இலங்கையின் இருமொழி இலக்கியங்களிலும் கதிர்காம வள்ளி கல்யாணம் பற்றிய கதைகளைக் காணலாம்.

முருகனின் நாயகியும் தேவேந்திரனின் திருமகளுமான தெய்வானை வள்ளியோடு இங்கு தங்கி விட்ட கந்தக்கடவுளை மீட்டுச் செல்ல முயன்றதாயும், ஆனாலும் அந்த முயற்சி தோற்றுப் போகவே அவளும் இங்கேயே தனிக்கோயில் கொண்டு விட்டதாகவும் இப்போதைய ஐதீகக் கதைகள் சிலவும் உள்ளன.

இறைவன் குமரனின் மலைக்கு அருகில் வள்ளி மலை இருக்கிறது. அங்கே வள்ளியம்மை கோயிலும் உள்ளது. தனியே தேவசேனா கோயிலும் உள்ளது. என்றாலும் வள்ளியம்மைக்கே எல்லாவிடத்தும் முதன்மையும் சிறப்பும் தரப்படுவது அவதானிக்கத் தக்கது.

ஆரம்ப காலத்தில் கதிர்காமத்தில் ஆகம பூர்வமான வழிபாடுகள் சில நடைபெற்றது என்பதும் இந்துக்கள் சிலரின் நம்பிக்கை. எனினும் இன்றைக்கு கதிர்காமத்தில் அவற்றிற்கு எல்லாம் இடமே இல்லாமல் போன பிறகு.. தமிழ் இந்துக்கள் அதிகம் செறிந்து வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கதிர்காம ஆலயங்கள் தோற்றம் பெற்றுள்ளன. அங்கெல்லாம் கதிர்காம மரபிலான வழிபாடுகள் கொஞ்சம் சிவாகமச் சார்பு பெற்று தமிழியற் செழுமையோடு ஆற்றப்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்து புலோலி உபய கதிர்காமம், நல்லூர் பாலகதிர்காமம், காரைநகர் கதிர்காமம், நீர்வேலிச் செல்லக்கதிர்காமம், செல்வச்சந்நதி இன்னும் மட்டக்களப்பு சின்னக்கதிர்காமம், உகந்தை மற்றும் மண்டூர், வெருகல் கந்தசுவாமி கோவில்களை இவற்றிற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்தக் கோவில்களின் வரலாறும் வழிபாடும் கதிர்காமத் தலத்துடன் நெருக்கமான  பிணைப்போடு அமைந்துள்ளன. இவற்றில் பலவற்றிலும் கதிர்காம மஹோற்சவ காலமாகிய ஆடிப் பூரணையை ஒட்டிய திருவோணத் திருநாளை தீர்த்தவாரியாக, மஹோற்சவ நிறைவாகக் கொண்டதாக16 நாள் விழா நடக்கவும் காணலாம்.

வேடர் பூசை

அருணகிரியார் கதிர்காமத் திருப்புகழில் ‘வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே’ என்று பாடுகிறார். இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்யும் பூசகர்களான சிங்கள மொழி பேசும் கப்புறாளை என்போர் தாங்கள் வள்ளி நாயகியின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதமடையக் காணலாம்.

இதை விட 1960களில் இலங்கை அரசு கதிர்காமத்தை புனிதநகராகப் பிரகடனம் செய்யும் வரை இக்கோயிலில் மான் இறைச்சி படைக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளமை அறிய முடிகிறது.

திருவிழாக்களில் கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூசிக்கப்பெறும் புனித பெட்டி யானையில் உலா வருகிறது. இதனுள் சுப்பிரம்மண்ய யந்திரம் உள்ளது என்று நம்பிக்கை.. இதனை விட செஞ்சந்தனக் கட்டையாலான ஆறுமுகப் பெருமானின் திருவடிவம் ஒன்று இருப்பதாகவும் இன்னும் பலவாறாகவும் சொல்லுவார்கள்.. ஆனால் அது கதிர்காம ரஹஸ்யமாக இன்னும் இருக்கிறது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை செய்யும் வழக்கம் இன்றும் நிலவி வருகின்றது. எத்தனையோ வாகன வசதிகள் ஏற்பட்டு விட்ட போதும் பல மாதங்களை ஒதுக்கிப் பாத யாத்திரை செய்து வழிபாடாற்றும் பண்பு பேணப்பட்டு வருகின்றமை ஈழத்தவர்களின் முருக பக்திக்குச் சான்று பகர்கின்றது எனலாம்.

எது என்னவாயினும், கதிர்காமத்தில் ஏதோ ஒரு அபரிமிதமான சக்தி பரவியிருப்பதைக் அங்கு செல்லும் அன்பர்கள் உணர்கிறார்கள். அந்த சக்தியின் வெளிப்பாடு யாவரையும் கவர்ந்திழுப்பதை எவராலே வெல்ல முடியும்?.. தமிழறியாத பண்டி ஹோத்தோ என்கிற வேடுவர் தலைவன் (1997) சொல்வதை கேளுங்கள் –

‘வள்ளி எனது அக்கா.. கந்தன் எனது மைத்துனன்.. வள்ளி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள்.. அக்காவை மணம் முடித்த கந்தனுக்கு வருடம் தோறும் எடுக்கும் பெருவிழாவில் கலந்து கொள்வது எங்கள் கடமை… ஒரு திருவிழாக் காலமது.. இரவு நல்ல தூக்கத்திலிருந்தேன். என் கனவில் தோன்றிய வள்ளியக்கா, ‘என்ன நீ இங்கே தூங்குகிறாய்… அங்கே உன் மைத்துனன் கந்தனுக்குப் பெருவிழா நடக்கிறது. அங்கே சென்று உனது ராஜமரியாதையைச் செய்’ என்று கட்டளையிட்டார்… அங்கே சென்று எனது பணி முடிந்ததும் காட்டுக்குத் திரும்பி விடுவேன்’

(தினகரன் வாரமஞ்சரி- 1997 ஜூலை)

ஆக, கதிர்காம நியமங்களுக்கும் ஆசாரங்களுக்கும் பக்திக்கும் முதன்மை தந்து ஏனைய மதங்கள் நெகிழ்ச்சியுறுதலும், என்ன தான் பெரும்பான்மை இன சமூக எழுச்சி ஓங்கும் போதும், அவற்றை எல்லாம் வெல்ல வல்ல வன பக்திச் சக்தி விரவியிருப்பதும், கதிர்காமத்தின் தனித்துவமாக, இந்து மதத்தின் இன்னொரு பரிமாணமாகக் கருதப்படத் தக்கனவாயுள்ளன.

வேட்டையாடலும், உணவு சேமித்தலும் என்ற பெருங்கற்பண்பாட்டுக் காலத்திற்கும் முந்தைய சமூகக் கூட்டுறவின். தோற்றமாய்..  இனத்துவ சமயத்துவ வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் சமயம் என்ற காட்சிப்படுத்தலாய், அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் அரவணைத்து.. உயர்ந்து.. விரிந்து கதிரமலை நிற்கிறது.. தானே ஒரு தனிப்பண்பாட்டுப்  பேரெழுச்சியாக.. இது தான் ஸ்கந்தனின் ஹேமகூட கிரியல்லவா..?