கோறளைப்பற்று கோட்டத்தில் சாதனை படைத்த ஆசான்கள்

(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று கோட்டத்தில் இருந்து விருதுகள் பெறுவதற்கு அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இது பற்றி கோட்டக்கல்விப் பணிப்பாளர் பற்றி நியுசிற்கு கருத்து அறிவிக்கையில், கோட்ட கல்வி பணிப்பாளர் என்ற வகையில் நான் மிகவும் சந்தோசமடைகின்றேன் என்று கல்குடா கல்வி வலயத்தின் கோறளைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர்  நா. குணலிங்கம் 2016 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் அதியுயர் விருதான குரு பிரதீபா பிரபாவிருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார். 



அவர் மேலும் கூறுகையில் எமது கோறளை பற்றுக்கோட்டம் விசேடமாக கல்குடா கல்வி வலயத்திலே மூன்று கோட்டங்கள் உள்ளன கோறளைப்பற்று கோட்டம், கோறளை பற்று வடக்கு கோட்டம், ஏறாவூர்ப்பற்று- ii கோட்டமும் என மூன்று கோட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று கோட்டங்களில் இருந்தும் ஒன்பது ஆசிரியர்களும் இரண்டு அதிபர்களும் எல்லாமாக பதினொரு பேர் குருபிரதீபா பிரபா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இம்முறை அதிபர்களுக்கான குரு பிரதீபா பிரபா விருதுக்கு இரண்டு பேரும் ஆசிரியர்களில் ஒன்பது பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் இதில் எனது கோறளைப் பற்று கோட்டத்தில் மாத்திரம் இரண்டு அதிபரும் மூன்று ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்ற வகையில் இவ்விருதுகளை பெற்ற அதிபர் , ஆசிரியர்களை மேலும் வலயக் கல்வி பணிப்பாளர் சார்பாகவும் பாராட்டுகின்றேன். இவ் விருது என்பது உலக ஆசிரியர் தினமான ஒக்டோபர் 5இல் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் ஒக்டோபர் 6 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம் முதன் முதலாக இலங்கையில் ஆசிரியர் சேவைப் பிரமாணம் என்ற விடயம் ஒக்டோபர் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த தினத்தில் தான் இந்த விருது வழங்கல் வைபவத்தையும் நடத்துகிறார்கள். இந்த வகையில் குருபிரதீபா பிரபா விருதானது பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த விருதுக்கான தெரிவு அமைந்திருக்கிறது. குறிப்பாக குறைந்த விடுமுறை பெற்ற அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு என்கின்ற ஒரு நியமமும் அடுத்ததாக அவர்களால் நிறைவேற்றபடுகின்ற பணிகள் அல்லது அவர்களின் பணிகள் மூலம் மாணவர்கள் அடைந்த அடைவு மட்டத்தினையும் அடிப்படையாகக் கொண்டு விசேடமாக அவர்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற போது அந்த மாணவர்கள் கற்பித்தல் பணியின் ஊடாக அடைந்த சாதனைகள், வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டும் மேலும் அந்த ஆசிரியர்கள் பாடசாலையில் செய்கின்ற வேலை திட்டங்கள், பணிகள், சமூக நிறுவனங்களில் செய்த பங்களிப்பு மற்றும் வெளியிடப்பட்ட ஆக்கங்கள், விசேட வெளியீடுகள் இவ்வாறான பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் அந்த தெரிவு இடம் பெறுகிறது. 

அந்த வகையில் உண்மையில் எங்களது கல்குடா கல்வி வலயத்தில் இருந்து இம்முறை (2016) பதினொரு பேர் தெரிவு செய்யப்பட்டு பாராட்டு பெற்றுள்ளார்கள். அந்த வகையில் இவ்விருதுகள் பெற்ற அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வலய கல்வி பணிப்பாளர் சார்பாகவும் விசேடமாக எங்களுடைய கோறளைப் பற்று கோட்டத்தில் விருதுகள் பெற்ற அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என முலும் கூறினார். அதிபருக்கான விருதினை வாழைச்சேனை பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் கயிலாயப்பிள்ளை கதிர்காமநாதன் பெற்றுள்ளார். 

அவர் 2014 ஆம் ஆண்டு மற்றும் இம்முறையும் (2016) அதிபருக்கான குரு பிரதீபா பிரபா விருதினையும் 2004 ஆம் ஆண்டு வித்தியா கீர்த்தி ஸ்ரீசமன விருதினையும் பெற்றுள்ளார். 

இவர் பயிற்றப்பட்ட தமிழ், பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் கலைமானியுமாவார். 1992 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்து 2009ஆம் ஆண்டு வரை ஆசிரியராகவும் அதன்பின் இன்று வரை அதிபராகவும் சேவையாற்றி வருகிறார். வாகனேரி கோகுலம் வித்தியாலயம், கல்மடு விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பின்னர் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபராக தரமுயர்த்தப்பட்டு அதன் பிற்பாடு இன்று வரை அதிபர் தரம் 3இல் வாழைச்சேனை பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் சேவையாற்றி வருகிறார். கருங்காலிச்சோலை ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலய அதிபர் திருமதி. விமலகுமாரி சந்திரபால மற்றொரு அதிபருக்கான விருதினை பெற்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு இருந்து 2002 ஆம் ஆண்டு வரை ஆசிரியராகவும் அதன் பிறகு அதிபராகவும் வெம்பு பாடசாலையில் தரம் உயர்த்தப்பட்டு அங்கு புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவரை சித்தியடைய வைத்து பின்னர் வாழைச்சேனை கருங்காலிசோலை ஸ்ரீகிருஷ்ணா வித்தியாலயத்தில் சேவையாற்றி வருகிறார். 

ஆசிரியர் கலாசாலை கல்விக் கல்லூரி நிறைவு செய்தவரும் ஆவார். வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய ஆசிரியை திருமதி. தவமலர் கமலேஸ்வரன் தொடர்ச்சியாக 2013,2014, மற்றும் (2016) இம்முறையுமாக மூன்று தடவைகள் குரு பிரதீபா பிரபா விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்திலும் பின்னர் 2005 ஆம் ஆண்டு வரை மாங்கேணி றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் 2013 ஆம் ஆண்டு வரை கல்குடா நாமகள் வித்தியாலயத்திலும் பின்னர் இன்று வரை வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திலும் சேவையாற்றி வருகிறார். பட்டப்பின்படிப்பு மற்றும் கலைமானியும் ஆவார். வாழைச்சேனை பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய ஆசிரியர் திருமதி.கலைவாணி வசந்தகுமார் அவர்கள் அடுத்த ஆசிரியைக்கான குரு பிரதீபா பிரபா விருதினைப் இம்முறை முதல் தடவையாக பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்து வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்திலும் இன்று வரை பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திலும் சேவையாற்றி கொண்டிருக்கிறார். தேசிய கல்வி கல்லூரி டிப்ளோமா மற்றும் கலைமானியுமாவார்.

அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய ஆசிரியர் கந்தசாமி சங்கர் அவர்கள் இம்முறை இந்த குரு பிரதீபா பிரபா விருதினைப் பெற்றுள்ளார். இவர் அரச சேவையில் இணைந்து பதினெட்டு வருடங்களும் ஆசிரியர் சேவையில் இணைந்து ஒன்பது வருடங்களும் தொடர்ந்து மேற்படி பாடசாலையிலேயே சேவையாற்றி வருகிறார். 

சமாதான நீதவானும் கல்வி டிப்ளோமா மற்றும் கலைமானியுமாவார். இவர்களுக்கு பாடசாலை சமூகம் பெற்றோர்களும் மற்றும் ஏனைய ஆசிரியர்க்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.