
21ம் நூற்றாண்டில் மனித வாழ்வு பல்தேசியக் கம்பனிகளின் உற்பத்திப் பொருட்களின் மோகத்தில் சிக்குண்டு காணப்படுகின்றுத. நுகர்வதற்கான பணத்தைத் தேடியும் நுகர்வுச் சமுதாயமாக இன்றைய மனித வாழ்வு உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் சுயமாகச் சிந்தித்து செயற்பட்டு கூட்டாக இணைந்து, கொண்டாடி மகிழ்வதற்கான சந்தர்ப்பத்தை பாரம்பரிய கலைகள் ஏற்படுத்துகின்றன.
இதனை கருப்பொருளாகக் கொண்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் திரு.சு.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் நுண்கலைத்துறையின் இறுதி வருட மாணவி தி.பிரதீபாவின் ஆய்வுக்கான நிகழ்வாக 'பாரம்பரிய ஊஞ்சல் விளையாட்டு விழா நிகழ்த்துகையும் கலந்துரையாடலும்' என்ற தலைப்பின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த முன்றலில் (திறந்த வெளி) 18.01.2018 அன்று சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் திரு. சு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட பீடாதிபதி திரு.மு.ரவி அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. சி. ஜெயசங்கர் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மட் /ககு /வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நுண்கலைத்துறை மாணவர்கள், ஆர்வலர்கள், ஊஞ்சல் பற்றி அனுபவம் வாய்ந்த ஆய்வுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் பங்கு கொண்டு சிறப்பித்தனர். இதன் போது சம்பிரதாய பூர்வமாக பாரம்பரிய முறையில் ஊஞ்சல் விழா ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என பலரும் பாரம்பரிய ஊஞ்சல் பாடல்கள் பாடி ஆடிமகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் தொடர்பான கலந்துரையாடலில் நுண்கலைத்துறை தலைவர் திரு.சு.சந்திரகுமார், கிழக்குப்பல்கலைக்கழக கலைகலாசர பீட பீடதிபதி திரு.மு.ரவி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. சி. ஜெயசங்கர், களுதாவளை பிரதேச சபை, முகாமைத்துவ உதவியாளர் திரு. வி.கௌரிபாலன், யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முன்னால் தலைவர், பேராசிரியர் யுஆ.கிருஷ;ணவேனி, கரவெட்டியை சேர்ந்த திரு.செ.வேலுப்பிள்ளை, விளாவட்டவனைச் சேர்ந்த திரு.எஸ்.பிரதீபன், ஏனைய விரிவுரையாளர்கள் மற்றும் நுண்கலைத்துறை மாணவர்கள் எனப் பலரும் இணைந்து ஊஞ்சல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடப்பட்டது. இது ஆய்வாளரின் ஆய்வுக்கு பெரும் உதவியாகவும் தேவைப்பாடாகவும் இருந்தது.
சிறுவர்கள், வளர் இளம் சமுதாயத்தினர், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் எனப் பலரும் கூட்டாக இணைந்து பங்கு கொள்ளும் இவ்ஊஞ்சல் விளையாட்டு நிகழ்வானது கொண்டாடி மகிழ்வதற்கான களமாக அமைந்ததோடு, மட்டும் அல்லாது, அது ஒவ்வொருவரதும் உடல், உள செயற்பாட்டிற்கும், மனவெழுச்சிக்கும், சுவாச பயிற்சிக்கும் சிறந்தவொரு மருந்தாகவும் அமைவதை ஆய்வாளரால் அறிந்து கொள்ளமுடிந்தமையும் வெளிப்பட்டது. இந்த ஆய்வின் மேற்பார்வையாளர் திரு.சு.சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.


















.jpeg)

.jpeg)
