இன்றைய சமூகத்தில் பெண்கல்வியும் எழுச்சியும்

சமுதாயத்தின் ஓர் அங்கமாக சரிபாதியாக திகழும் பெண்களுக்கு இச் சமுதாயமே பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றது. அவற்றுள் ஒன்று பெண்கல்வி மறுக்கப்படல் ஆகும். இதன் காரணமாக ஒரு பாதி மக்கள் இருளிலும் , ஒரு பாதி மக்கள் ஒளியிலும் வாழக்கூடிய அவலநிலை காணப்படுகின்றது. மேல்நாட்டு மக்களிடையே இவ்வேறுபாடு பெரும்பாலும் காணப்படுவதில்லை . நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களிடையே அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களிடையேதான் இவ்வேறுபாடு பெரிதும் காணப்படுகின்றது.


  தந்தை வழி சமுதாயம் தோன்றிய பின் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்குப்பின் தங்களது சொத்துக்களுக்கு வாரிசாகவும் , முதுமை காலத்தில் தங்களை காப்பவன் எனவும் ஆண் மக்களையே கருதுகின்றனர். இத்தகைய ஆண்குழந்தைகள் அனைத்து வழிகளிலும் திறமைப்பெற்று திகழ வேண்டும் என்பது அவர்களது விருப்பமாய் உள்ளது. ஆனால் பெண் குழந்தைகளோ திருமணமே குறியிலக்காக கொண்டு வளர்க்கப்படுவதற்கு முக்கியதுவம் அளிக்கின்றனரே யொழிய கல்வியை தேவையற்றதாக கருதுகின்றனர்.

 அதிகாரம் அறிவினால் கட்டப்படுகின்றது. இதனால் இயற்கையாகவே ஆண் , பெண் உறவு முறையில் ஏற்படும்  அதிகாரப்போட்டியில் தனது மேலாட்சியை காட்ட முயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியை கட்டுப்படுத்தியது. இதற்காக பல தந்திரங்களை கையாண்டுள்ளது. பால்ய விவாகம் , கற்ப்புக்கோட்பாடு. தாய்மையைக் கொண்டாடுவது ,குழந்தைப்பேறு என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையை திணிக்கின்றார்கள். இது பெண்களின் அறிவு வளர்ச்சிக்கு தடையாக அமைந்ததுடன் சுமையாகவும் மாறிவிடுகின்றது.

  ஆனால் இன்றைய சமூகம் ஒரு திருப்பு முனையாகவே காணப்படுகின்றது. பெண்கல்வியை ஊக்கப்படுத்தி பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். நாட்டின் தலைவர்களாகவும் ,நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இடம்பிடித்திருக்கின்றார்கள். இவை சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விளிப்புணர்வே இதற்க்கு காரணமாகும்.
இன்றைய தொழிநுட்ப
 நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றார்கள்.
  அந்த வகையில் பெண்கல்வியின் தேவையெனும் போது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கின்றது. பெண்களின்  கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும் அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புக்களை சுமக்கின்ற பெண்கள் வேர்களைப் போன்றவர்கள். வேர்கள் வலுவாக இருக்கும் போதுதான் மரம் செழுமையாக இருக்க முடியும்.

பெண்கல்வியின் மூலம் குடும்பம் வலிமையாகும் போது சமூகம் வலிமையாகும் சமூகம் வலிமையாகும் போது முழு நாடும் வலிமையடையும்.
 பெண்சமத்துவம் பற்றி பார்க்கையில் கல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கல்விதான் மிகப்பெரிய துணிச்சலான ஆயூதமாய் இருக்கிறது. சங்க காலத்துப் பெண்கள் உடல் வலிமையிலும் மன வலிமையிலும் சிறந்துதான் விளங்கினர்.

இடைக்காலத்தில்தான் "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்க்கு" என பெண்களின் வலிமையை உடைத்தனர். ஆனால் பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் பெண்கல்விக்கு ஆதாரவாக வலிமையான பாடல்களை எழுதினர்.   “ கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை!” எனும் பாடலை உதாரணமாக குறிப்பிடலாம்.

அந்த வகையில் தான் பெற்ற பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் இருவரையும் சம நோக்குடன் அவர்களை பராமரிக்க வேண்டும். இன்று சமுதாயத்தில் வறுமை என்பது பெரும்பாலான மக்களை ஆட்டிப்படைக்கும் பெரும் நோயாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்களேயாகும். பெண் வாழ்வு ஏற்றம் பெற கல்வி ஒன்றே வழி என பல சமூக நலவாதிகள் அன்று முதல் இன்று வரை வலியுறுத்தி வருகின்றனர்.

  பெண்கள் அனைத்து துறைகளிலும் சம உரிமையுடன் இயங்கும் சமுதாயமே இரட்டைச் சக்கர சமுதாயமாகும். இல்லையேல் ஒற்றைச்சக்கரத்தில் ஓடி விரைவில் சாய்ந்துவிடும். கற்றலில் இனிமையை புகுத்திய அரசு கல்வி இனிமையாய்  இருந்தால் மட்டும் போதாது. அது வாழ்க்கைக்கு பயன்படுத்துவதாயும் இருக்க வேண்டும் என்னும் நோக்கில் செயல்படுத்தி வருவதுதான் பெண்களுக்கான தொழிற்கல்வி. பெண்கள் ஆண்களுக்கு அடிமைப்பட்டு கிடக்காமல் சம உரிமைப்பெற்று வாழ பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் கல்வி அவசியம் தேவை.

  அந்த வகையில் பெண்கல்வி என்பது புள்ளிவிபரங்களை பலப்படுத்துவதற்கு அல்ல பூமியை வலுப்படுத்துவதற்கேயாகும். வெறுமனே வீட்டு விளக்காய் இருக்கும் பெண்கள் ஏட்டெடுத்து படித்து நாட்டுக்கே வெளிச்சம் வீசுபவர்மகளாக மாற வேண்டும். துனிமனித வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும், நாட்டு வளர்ச்சிக்கும்,பெண் கல்வி அவசியமானதாகும். பெண்ணே…. நீ மற்றவர் ஒளியை எதிரொளி செய்து வாழும் திங்களாக இருக்காதே. ஒளிமிகு ஞாயிறாய் மாறி உன் கால்களுக்கு சுயமாய் நிற்க்கக் கற்றுக்கொள்.

கதிரேசன் ஜெயநந்தனி.
2ம் வருட சிறப்புக்கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.