இதுபற்றி வெற்றிலைத் தோட்டத்து உரிமையாளரான இராஜரெட்ணம் என்ற வயோதிபர் கூறுகையில், "களுதாவளை நீர்வெற்றிலைக்கு நம் நாட்டில் ஒரு மவுசு இருக்கிறது. அதை வேறெந்த வெற்றிலையாலும் தகர்க்க முடியாது. அதன் சுவை ஒரு தனிரகம். அதை தாம்பூலமாக தரித்தவர்கள் வேறெந்த வெற்றிலையையும் விரும்ப மாட்டார்கள். இந்த வெற்றிலைச் செய்கை எமது கிராமத்தில் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட தாக எமது முன்னோர் தெரிவிக்கி றார்கள். இதற்கான கொழுந்து மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக எமது கிராமத்து வரலாறு கூறுகிறது. உலகில் வெற்றிலைக்கு பெரிய மதிப்புக் கொடுக்கும் நாடு பாகிஸ்தான் ஆகும். இந்த வெற்றிலைச் செய்கையையும், அதன் அபிவிருத்தியையும் எமது அரசு ஏற்றுமதிப் பயிர்களின் அபிவிருத்தியோடு சேர்த்திருக்கிறது" என்றார்.
"இப்போது அவ்வாறான வெற்றிலைத் தோட்டங்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் பெய்த மழையாலும் அதனால் தேங்கிய நீராலும் நிலம் ஊற்றுப் பிடித்து சேதமடைந்து விட்டன. அதனை மீள்நடுகை செய்வதென்பது சிறிய காரியமல்ல. அது பெரும் பணச் செலவையும், வேலைக் கஷ்டத்தையும் தோற்றுவிக்கப் போகிறது. அந்த மீள்நடுகை பயன் தருவதற்கு சுமார் மூன்று மாதங்கள் எடுக்கலாம். ஆதலால் இவ்விடயத்தைப் பொறுத்தவரை அரசு வெற்றிலைத் தோட்டச் செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமாரும் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியாவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்தத் தோட்டங்களின் பாதிப்பால் வெற்றிலைக்குத் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும்" என்றார் அவர்.

இனி இந்த வெற்றிலைச் செய்கை பற்றிப் பார்ப்போம்.
வெற்றிலையை சந்தைப்படுத்துவோர் அதனை பகழி கணக்கிலேதான் எண்ணுவார்கள். ஒரு பகழியில் 50 வெற்றிலைகள் இருக்கும். வெற்றிலைக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. வெற்றிலைத் தோட்டங்கள் களுதாவளையில் சுமார் மூவாயிரம் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றிலைச் செய்கைக்கு இறுக்கமான மண் ஒத்து வர மாட்டாது. அதற்கு குருத்து மணலே பொருத்தமானது. வெற்றிலைக் கொடிக்கு கொழுகொம்பாக 'அலம்பல்' என்ற மரமே நடுவார்கள். இது மட்டக்களப்பின் மேற்குப் புறமாக இருக்கும் காட்டில் இருந்தே வெட்டிக் கொண்டு வரப்படும். இதற்காக வனபரிபாலனத் திணைக்களம் உத்தரவுப் பத்திரங்களை வழங்கி வருகின்றது. இந்தக் கொழுகொம்பு நீளமானது, நேரானது, சிறிய மெல்லிய கிளைகளைக் கொண்டது.
நடுகைக்கான கொழுந்துகளை உள்ளூர் தோட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதனை புருவ முறையாகவே நட வேண்டும் நான்கு நான்கு புருவங்களுக்கு இடையே வாய்க்கால் இருக்க வேண்டும் இந்த வாயக்காலினூடாக நடந்து சென்றே நீர் பாய்ச்சப்படும். இந்த வாய்க்கால் குறுக்காகவும், நேராகவும் இருக்கும். வெற்றிலைக் கொடியை நடுவதை 'கொழுந்து பதித்தல்' என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள்.
இது அடிக்கடி மாற்ற முடியாதது. அதற்காகவே இதனை 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று கூறுவார்கள். தோட்டத்திற்கான நீர் அதற்குப் பக்கத்தில் இருக்கும் துரவு என்ற ஆழமான குழியில் இருந்தே பெறப்படும். மண்ணில் விசாலமாக தோண்டப்பட்ட பெரிய கிடங்கையே துரவு என்று அழைப்பார்கள். இந்த தோட்டத்துக்கான வேலியும் மரங்களால் நடப்பட்டிருக்கும். அத்தோடு முற்றாகவும் மறைக்கப்பட்டிருக்கும்.
முன்பு ஒரு காலத்தில் பெண்கள் இந்தத் தோட்டங்களுக்குள் உட்புக முடியாது, அருகில் செல்ல முடியாது என்றதொரு ஒழுங்கு இருந்தது. அவை காலப் போக்கில் ஒழிக்கப்பட்டு விட்டன, அல்லது ஒழிந்து கொண்டன எனலாம்.
காலமாற்றத்துக்ேகற்ப எழுதப்படாத ஒழங்கு விதிகளும் மாற்றமடைகின்றன. இதற்கான உரம் இப்போது இருப்பதைப் போன்ற இரசாயன உரமல்ல. இந்தத் தோட்டத்திற்கான உரத்துக்காக ஒரு பசுமாட்டுத் 'காலை' இருக்கும். அதற்குள் புதிதாக குருத்து மணல் போடப்படும். அந்தக் காலைக்குள் மாடுகள் தங்கியிருக்கும். அவைகளின் சாணமும், சிறுநீரும் இந்த குருத்து மணலோடு கலக்கும். மாதத்தில் ஒரு தடவை காலைக்குள் இருக்கும் குருத்து மணலை எடுத்துக் கொண்டு போய் வெற்றிலைத் தோடத்திற்குள் இருக்கின்ற கால்வாயிலே கொட்டி அதற்கு மேலே நீரை கொட்டினால் நீரும் மண்ணும் கலந்து வெற்றிலைக் கொடிகளுக்குள் பாயும். இதுவே நீர்பாய்ச்சும் முறையாகும். இதே போல புதிய குருத்து மணல் மாட்டுக்காலைக்குள் கொட்டப்படும்.
வெற்றிலைத் தோட்டத்து எல்லை வேலிகளில் இராசவள்ளிக் கிழங்கு மற்றும் பாகல், பீர்க்கு போன்ற மரக்கறி கொடி வகைகள் படர விடப்படும். இது வேலியினூடாக பயன் பெறப்படுவதை காட்டுகிறது. இதே வேலியின் அடிப்பகுதியில் பிள்ளைவளத்தான் செடியை நாட்டி விடுவார்கள். அது நல்ல கிழங்கைத் தரும். அதற்கென்று நீர்பாய்ச்சுவதோ பராமரிப்போ தேவையில்லை.
ஒரு புதிய தோட்டத்தில் வெற்றிலையை அறுவடை செய்வதற்கு ஆகக் குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவைப்படும். அதன் பிற்பாடு மாதத்தில் இரு தடவையோ அல்லது ஒரு தடவையோ வெற்றிலை பறிக்கலாம். இந்த வெற்றிலைச் செய்கை பற்றிய ஆய்வுகளை கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அருள்நந்தி மிகுந்த அக்கறையோடு முன்னெடுத்து வந்தார்.
அவர் புதிதாக வெற்றிலைத் தோட்டத்தை ஆரம்பிப்பவர்கள் ஒரு கிருமிநாசினியை வெற்றிலைக் கொழுந்து பதிப்பதற்கு முன்பு விசிற வேண்டும், இது ஆரம்ப காலத்தில் வெற்றிலைக் கொழுந்தின் அடிப்பகுதி அழுகிப் போவதைத் தடுக்கும் என சிபாரிசு செய்திருந்தார். இங்கு ஒரு சிறிய அளவிலான ஆய்வு நிலையத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தை அவர் கேட்டிருந்தார்.
அதற்கு பல்கலைக்கழக நிருவாகம் செவிசாய்த்திருந்தது. இது கடந்த 2018 நடுப்பகுதியில் நடந்தது. அந்த வேண்டுகோள் முற்றுப் பெறவில்லை. அண்மையில் வெற்றிலையில் புள்ளிகள் விழத் தொடங்கின. அதற்கு 'அன்ரூகோல்' என்ற மருந்தை விசிறுமாறு சிபாரிசு செய்தார். அந்த நோய் அந்த மருந்தினால் கட்டுப்படுத்தப்பட்டது.
வெற்றிலை விளைச்சலை மேம்படுத்துவதோடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வேண்டும் என்ற நோக்கோடு 'வெற்றிலை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம்' ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பல உதவி ஒத்தாசைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை செய்திருந்தார். வெற்றிலைச் செய்கை தொடர்பாக ஒரு ஆய்வு நுாலையும் அவர் ஆக்கி வெளியிட்டிருந்தார். அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பாக, கிழக்கு மாகாண சபையில் பிரதி விவசாயப் பணிப்பாளராக பதவி வகித்தவர்.
ஒரு சிறிய தோட்டம் அதாவது 24x60 சதுர அடி கொண்ட தோட்டத்தினூடாக மாதமொன்றுக்கு ரூபா 25000 அளவில் நிகர வருமானமாகப் பெற முடியும் என வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்டு வரும் திருமதி சாந்தி தெரிவித்தார்.
எஸ்.எஸ்.தவபாலன்