வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்

கல்வி ''பெருமைக்காகத் தேடிப் பெருவது அல்ல.. பெற்றதைக் கொண்டு பெருமைத் தேடிக் கொள்வது''. அத்தகைய சிறப்பு கொண்ட கல்வியை குழந்தைகளுக்கு புகட்டுவதில் பெற்றோரும் ஆசிரியர்களுமே முக்கிய வகிப்பங்காளர்களாக திகழ்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் தனது முன்பள்ளி மற்றும் பாடசாலைக் கல்வியை ஆரம்பித்ததிலிருந்து கற்றல், கற்பித்தல், வழிநடத்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளிலும் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்காளராக காணப்படுகின்றார்கள் என்பது முக்கியமான அம்சமாகும். மேலும் தத்துவம் என்றால் என்ன என்று நோக்குகையில், தத்துவம் என்பது மனனம் செய்வது அன்று மனதை மலர செய்வது எனப்படும். எனவே அத்தகைய தத்துவங்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் மனதை மலர செய்வது ஆசிரியர்களின் கடப்பாடாகும்.

மனித வாழ்க்கையும் அவனது தொழிற்பாடுகள், கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகளையும் அடையாளம் கண்டு கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு கல்வித்தத்துவத்தின் அறிவு தேவைப்படுகின்றது. இவ் அறிவினைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் சமூகத்தின் நல்லுறவைக் கட்டியெழுப்பி கொள்ளும் திறன்களை தனக்குள் வளர்க்துக்கொள்ள கூடியதாக திகழ்வர். அத்துடன் எந்த ஒரு கல்வி செயற்பாட்டின் போது நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானித்தல் வேண்டும். அதனைப்போலவே கல்வித் தத்துவம் அறிவினைப் பெற்ற ஆசிரியருக்கு அதனை தீர்மாணிப்பதும் செயற்படுத்துவதும் இலகுவாக இருக்கும். பாடசாலையில் கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அனைத்து ஆசிரியர்களுக்கும் இருக்க கூடிய மிகப் பெரிய பொறுப்பாகும். இதனை தீர்மாணித்து கொள்வதற்கும் ஒவ்வொரு மட்டத்திலும் எத்தகைய விடயங்களை கற்பிப்பது அதனை எந்த அளவு கற்பிப்பது போன்ற பல அம்சங்களையும் கல்வி தத்துவம் பெற்ற ஆசிரியருக்கு தீர்மானிப்பது மிகமிக இலகுவாக இருக்கும்.

அவ்வகையில் குழந்தையானது தனது குடும்பத்திற்கு வெளியே முதன் முதலாக அன்பும், பரிவும் கொள்ளும் முதலாது நபராக ஆசிரியரே விளங்குகின்றார். ஆசிரியர் தொழில் என்பது ஓர் உயர் தொழிலாகும். அதாவது வாண்மை அல்லது தொழில் வாண்மை என்பதை Profission எனும் ஆங்கில பதத்தால் குறிப்பிடலாம். கல்வி நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும், கல்வி நிர்வாக செயற்பாடுகள் எவ்வளவு சிறந்தனவாக காலத்துக்குக் ஏற்றனவாக இருப்பினும், அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களை பொறுத்தேயாகும். அதனாலேயே மாணவர்களது அறிவு மட்ட வளர்ச்சி ஆசிரியர்களது அறிவுமட்ட வளர்ச்சிக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என கோட்பாடு கூறுகின்றது. மேலும் மாணவர்கள் ஆக்க பூர்வமான முறையில் முன்னேற ஆசிரியர் வழிகாட்ட வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் ஓர் சிறந்த தலைவராக இருத்தல் வேண்டும். தான் செய்வதை நன்றாகப் புரிந்து நடுநிலையுடன் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். பாடத்தை கற்பிக்கும் நல்லாசிரியனாகவும், நீதியை வழங்கும் நல்ல நீதிபதியாகவும், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிசாகவும், சமய நெறிகளைகளையும் நற்பண்புகளையும் கொண்ட சமயத் தலைவனாகவும், அன்பையும் ஆதரவையும் வழங்கும் நண்பனாகவும், வழிகாட்டியாகவும் ஆசிரியர் பல நடிபங்குகளை ஏற்பவராகின்றார்.

ஆசிரியர் தனது மாணவர்களை புரிந்துக்கொள்வது அவசியமாகும். மாணவரின் திறன்கள் வீட்டுச் சூழல், அடைவுகள் போன்ற தரவுகளைப் பெற்று அவர்களை புரிந்து கொண்டாலே அவர்களின் தராதரத்துக்கு ஏற்றவாறு கற்பிக்க முடியும். இதனையே சூழல்சார் கற்றல் கொள்கை கூறுகின்றது. அதாவது பிள்ளைகளுக்கு தங்களது ஆளுமையை வெளிப்படுத்த சிறப்பான சூழல் காணப்படும் போது மாணவர்களின் ஆற்றல் எல்லையற்றது என கூறுகின்றது.

இவ்வாறு பிள்ளையின் தராதரத்தை அறிந்து கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் போது நல்ல பெறுபேறுகளை பெறக்கூடியதாக உள்ளது. மேலும் ஆசிரியர் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், தான் கற்பிக்கும் விடயத்தைக் கவனமெடுத்து ஆயத்தம் செய்யாவிடின் அவர் வெற்றியுடன் கற்பிக்க முடியாது. ஆசிரியர்கள் வெறுமனே பாடக்குறிப்புத் தயாரிப்பதில் பயனில்லை. மாணவரின் முன்னறி பாடத்தின் கால அளவு பாடச்சுருக்கம், பயிற்சிகள் ஆகியன யாவற்றையும் மனதில் வைத்து பாடக்குறிப்பை ஆயத்தப்படுத்தல் வேண்டும். அத்தோடு ஒழுங்கான முறையில் அலகுகளாக்கி அவற்றை மாணவரின் முன்னிலையுடன் எவ்வாறு பொறுத்தலாம் என்பதனை ஆசிரியர் சிந்தித்து பாடக்குறிப்புக்களை தயாரிக்க வேண்டும்.

மேலும் ஆசிரியர் கற்றலுக்கு வசதி செய்து கொடுப்பவர் என்ற வகையில் வகுப்பறைச் செயன்முறையை வடிவமைக்கின்ற காரணிகளாக தன்மை உறுதிப்படுத்திக் கொள்ளல், தனியாள் விளக்கம், உயிர்ப்பான கற்றல், கூட்டுறவுக் கற்றல் வலுவூட்டல் போன்றவற்றை ஆசிரியர் கவணித்தில் கொள்வதோடு, வெவ்வேறு திறன்களைக் கொண்ட எல்லா மாணவர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையிலும் பாடக்குறிப்பை தயாரித்து கொள்ளவதன் ஊடாக வினைத்திறன் மிக்க கற்பித்தலை வகுப்பறையில் உருவாக்க முடியும். இந் நுட்பங்கள் யாவும் ஆசிரியர் மாணவர்களின் கற்றல் தேர்ச்சி மட்டத்தை அதிகரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களாகும். மேலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்ளும் போது கவனத்தில் எடுக்க வேண்டிய சில செயல்களாவன, கரும்பலகையில் எழுதும் போது மாணவர்களுக்கு விளங்கக்கூடியவாறு எழுதுவதோடு, மாணவர்களுக்கு எழுதிய விடயங்கள் மறைக்கும் வகையில் நிற்றல் கூடாது. கரும்பலகையை ஆசிரியர் பயன்படுத்தும் பொழுது ஒரு திட்டமிடப்பட்ட ஒரு ஒழுங்கு முறையினை பயன்படுத்தல், தெளிவில்லாமல் சிறிய எழுத்தில் எழுதுதல் ஆகியன தவிர்க்கப்படல் வேண்டும். நல்ல அழுத்தமான கரிய பலகை மற்றும் வண்ணக்கட்டிகளை பயன்படுத்துவதோடு முக்கியமானவற்றில் கீழ்கோடிட்டு காட்டப்படுவதன் மூலம் மாணவர்களுக்கு இலகுவாக மனதில் பதியக்கூடியதாக அமையும். பெரும்பாலும் ஆசிரியர்கள் கரும்பலகையினை பயன்படுத்தும் பொழுது மாணவர்கள் குறும்பு செய்யும் வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படும்.

தற்காலத்தில் புறத்தெறி கருவிகள் (Overhead projector) வசதிகளுண்டு. வேண்டியனவற்றை ஆசிரியர்கள் திட்டமிட்டு எழுதி திரையில் புறத்தெறிந்து மாணவரை நேரே பார்த்து கற்பிக்கும் பொழுது மாணவர்களின் கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். அத்தோடு வகுப்பறையில் ஆசிரியர் முழு நேரமும் ஆசனத்தில் இருந்தவாறு மாணவர்களுக்கு கற்பித்தல் கூடாது. ஆசிரியர் ஒவ்வொரு மாணவனினதும் அருகில் சென்று மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கற்பிப்பதோடு நகைச்சுவை பானியோடு கற்பிக்கும் பொழுது மாணவர்கள் உச்சாகத்தோடும், ஆர்வத்தோடும் கற்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது என ஆய்வுகளின் மூலம் தெளிவுப்படுத்தப்படுகின்றது. மேலும் ஆசிரியர்கள் கேள்வி கேற்கும் பொழுது மாணவர் பிழையாக விடையளித்தால், ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டு மாணவரை தண்டிக்க அல்லது வசை கூறுதல் கூடாது. இவ்வாறு ஆசிரியர் தண்டிப்பதையோ வசைக்கூறுவதனையோ மேற்கொள்ளுமிடத்து மாணவர்கள் தனக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து கல்வி செயற்பாடுகளில் முன்னோக்கி வருவதனை தவிர்த்துக்கொள்வார்கள். இதனால் மாணவனின் கல்வி விருத்தியடைவது தடுக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகளில் மாணவரை விடை கூறுவதற்கு ஊக்குவிப்பதன் ஊடாக குறித்த வினாவிற்கு விடையளிக்காவிடினும் அடுத்த அடுத்த வினாவிற்கு விடையளிப்பதற்கான ஆளுமை வளரும். இதனையே ஸ்கின்னரின் மீளவழியுத்தல் கோட்பாடு கூறுகின்றது. அதாவது சிறந்த தேர்ச்சியினை எதிர்பார்க்க வேண்டுமாக இருந்தால் வெகுமதி வார்த்தைகள் பரிசுப் பொதிகள் வழங்கி மீளவழியுத்துவதன் ஊடாக மாணவர்களிடன் சிறந்த தேர்ச்சி மட்டம் அதிகரிக்கும் என்கின்றார். எனவே ஆசிரியர் என்பவர் 'தடைக்கல்லே உமக்கோர் படிக்கல்'' என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் சாதனைக்கு பின்னால் பங்காளராக காணப்படுவோராக ஆசிரியர்கள் காணப்பட வேண்டும்.

ஒரு மாணவனின் கல்வி முன்னேற்றத்தில் உளவியல் அதிக பங்களிப்பினை செய்கின்றது. உளவியல் காரணிகளில் குழப்பங்கள் ஏற்படின் அது மாணவனின் கல்வியில் எதிர் மறையான தாக்கத்தினையே ஏற்படுத்தும் என பல உளவியளாலர்கள் கூறுகின்றனர். ஆகவே ஆசிரியர்கள் கல்விச் செயற்பாடுகளை வகுப்பறையில் மேற்கொள்ளுவதற்கு முன்னர் உளவியல் கல்வி தொடர்பான அறிவை பெற்றிருப்பதாக இருந்தல் வேண்டும். மேலும் மாணவர்களின் உளவியலை புரிந்து அதற்கேற்ப கல்வியை ஆசிரியர் வழங்கும் போது மாணவர்களிடத்தே சிறந்த பெறுபேற்றினை பெறக்கூடியதாக உள்ளது. உளவியல் கல்வி தொடர்பாக, சுவிட்சுலாந்து நாட்டைச்சேர்ந்த உளவியலாளரான பெஸ்டலோசி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். மாணவர்களுக்கு கல்வியை வழங்க முன்னர் அவர்களைப் பற்றிய ஆய்வை நடத்த வேண்டுமென்றும், கல்வி பயனுடையதாக வேண்டுமாயின் அது மாணவனின் உள்ளார்ந்த ஆற்றல்கள் போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமென்றும், ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் ஆளுமைப்பல்வகைமை மற்றும் தனிப்பட்ட தேவைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆகவே உளவியல் கல்வியை கற்று மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வியை வழங்குவதன் ஊடாக மாணவர்களுடைய அறிவு விருத்தியடைவதில் பங்காளர்களாக மாறமுடியும். இன்றைய நவீன கல்வி சிந்தனை என்னவென்று நோக்கின் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை கற்பிப்பதை விட அவர்களின் செயற்பாடுகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தமது கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.

மேலும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளின் போது ஒரு ஆசிரியர் கையாளும் முறைகளும். வழிகளும் பற்றிய பிரச்சினைகள் தோன்றலாம். அதாவது குறிப்பிட்ட மாணவர்களுக்கு எம்முறையை கையாளுவது அதாவது விரிவுரை முறை பயன்படுத்துவது நல்லதா? மனனம் செய்வதற்கு பலவந்தப்படுத்தல் நல்லதா? அவ்வாறு இல்லையெனில் செயல்கள் மற்றும் விளையாட்டு மூலம் கற்பித்தல் சிறந்ததா? என்ற வினாக்களுக்கு எந்த குழப்பமும் இன்றி கல்வி தத்துவம் பெற்ற ஆசிரியர்கள் பாடசாலையில் தெளிவான முடிவினை பெற்றுக்கொள்ள கூடியவராக திகழ்கின்றார்.

எனவே மாணவர் மைய கற்றல் கற்பித்தலை அடிப்படையாக கொண்ட தற்காலத்தில் ஆசிரியர்கள் கற்றல் தத்துவங்களுக்கு ஏற்பவும், கலைத்திட்ட நிபந்தனைக்கு ஏற்பவும் தன்னுடைய வகிப்பாகத்தின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் வசதி செய்து கொடுப்பவராக இருத்தல் வேண்டும் என்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாக அமைகின்றது.

விஜேகுமார் சுமித்ராதேவி
கல்வியல் விசேட கற்கை
கல்வியல், பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்