மட்டக்களப்பில் ஆற்றில் மூழ்கி எட்டுப் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !


( எம்.ஜி.ஏ.நாஸர்)
மட்டக்களப்பு- திஹிலிவெட்டை பிரதேச ஆற்றில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திஹிலிவெட்டை மாவடிமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டுப் பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய வைரமுத்து உதயச்சந்திரன் என்பவரே பலியானவரென தெரிவிக்கப்படுகிறது.

திஹிலிவெட்டைப் பகுதியிலிருந்து முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்திற்கு வாவி வழியாக தோணியில் தனியாக பயணம் செய்தவேளையில் தோணி கவிழ்ந்ததையடுத்து இவர் ஆற்றில் மூழ்கி மரணமடைந்ததாக தெரியவருகிறது.

இவர் ஆற்றில் மூழ்கி சில மணி நேரத்தில் வாவியின் நடுப்பகுதியிலுள்ள மண்திட்டியொன்றில் சடலம் கரையொதுங்கியுள்ளது.

மரணமடைந்தவர் வலிப்பு நோயுடையவரென அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தார்.

அதையடுத்து உடல் கூறு மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.