13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!


தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக முதல் கட்டமாக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். வேலூர் முகாமில் கட்டி முடிக்கப்பட்ட 220 குடியிருப்புகளை பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 104 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.176.02 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் 2021 நவ.2-ல் வேலூர் அருகே மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான 1,591குடியிருப்புகள் திறப்பு விழாவேலூர் அருகேயுள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று 12 மாவட்டங்களில் கட்டியுள்ள குடியிருப்புகளை காணொலி வாயிலாகவும் வேலூர் முகாமில் நேரடியாகவும் திறந்து வைத்து பயனாளிகள் வசம் வீடுகளை ஒப்படைத்தார்.

பயனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், புதிய குடியிருப்புகள் குறித்து இலங்கை தமிழர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள் குறித்த புகைப்பட தொகுப்பையும் முதல்வர் பார்வையிட்டார். வேலூர் மேல்மொணவூர் முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டார்.

விழாவில், துரைமுருகன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள், எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர்ஆனந்த் உள்ளிட்ட எம்.பி.க்கள், ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

வேலூர் மேல்மொணவூர் முகாமில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளிடம் நலம் விசாரித்தார். அப்போது, ஒரு வீட்டில் இருந்த பெண் குழந்தையிடம் உன் பெயர் என்ன என்று முதல்வர் கேட்டதும் ‘நிகிதா’ என்று கூறிய சிறுமியிடம், என்ன படிக்கிறாய் என்று கேட்டார். பர்ஸ்ட் ஸ்டாண்டடு என்று கூறிய சிறுமியிடம் தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடு என்று கேட்டு 2 கன்னங்களிலும் முத்தம் பெற்றுக்கொண்டார். பின்னர், விழா முடிந்ததும் புறப்பட்டபோது அங்கு காத்திருந்த இலங்கை தமிழர்களிடம் கைகளை குலுக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.