வவுனியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவ‍ரை அடையாளம் காணப்படவில்லை!வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் நீரேந்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஈச்சங்குளம் பொலிஸார் நேற்று சனிக்கிழமை (18) தெரிவித்தனர்.

தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த பெண்ணின் அழுகிய சடலம் தொடர்பாக அப்பகுதி மக்களால் கடந்த 14ஆம் திகதி ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது.

இந்த சடலம் தொடர்பிலும் யுவதிகள் காணாமல் போனமை தொடர்பிலும் வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நான்கிற்கும் மேற்பட்டோர் இந்த சடலத்தை பார்வையிட்டுள்ள போதும், இதுவரை இந்தப் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

இது குறித்த விசாரணைகளை தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் ஈச்சங்குளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.