பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது : மைத்திரி!

பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்துக்கு எமது கௌரவத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்ய எவருக்கும் தகைமை இல்லை.

பாராளுமன்ற தெரிவுக்குழு தோல்வியடைந்துள்ளது.ஆகவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்று இதுவரை காலமும் பேசப்பட்ட விடயத்துக்கு உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எமது கௌரவத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் ஆளும் தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக இந்த வழக்கு விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும்,நீதியரசர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்ய வும் பேசுகிறார்கள்.

நீதியரசர்களை விசாரணைக்குட்படுத்தும் தகைமை இங்கு எவருக்கும் கிடையாது.பாராளுமன்ற தெரிவு குழுக்கள் தோல்வி என்பதற்கு பல விடயங்கள் சான்றாக உள்ளன.

நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துக் கொண்டிருக்காமல் உரிய தரப்பினர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.நீதியரசர்களை விசாரணைக்குட்படுத்தினால் நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை கடுமையாக விமர்சிப்பார்கள்.மிகுதியாக இருக்கும் கௌரவமும் இல்லாமல் போகும்.

பொருளாதார மீட்சிக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த திட்டங்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டன.அதன் சாபத்தையே இன்று அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்பினால் சமூக கட்டமைப்பில் போதைப்பொருள் வியாபாரம்,விபச்சாரம் போன்ற சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.இது சிறந்தொரு நிலையல்ல,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் -04 நிறுவனம் வெளியிட்ட காணொளிகள் வெறும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.

சனல் -4 வெளியிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.